டில்லி:

உ.பி. மாநிலத்தில் ராமர் கோவில் கட்ட கையகப்படுத்தப்பட்ட நிலம் தொடர்பான  வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இது குறித்து நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்துகொள்ளும்படி ஒருசில அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்நிலையில, அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே செய்யப்படும் சமரசத்தை ஏற்க முடியாது என இந்த வழக்கில் தொடர்புடைய இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர.

அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இடிக்கப்பட்ட, பாபர் மசூதி இருந்த 2 புள்ளி 77 ஏக்கர் நிலத்திற்கு யார் சொந்தம் என்று உரிமை கோரிய வழக்கில், வழக்கு தொடர்ந்த,  முஸ்லீம் வக்பு வாரியம், ராமர்கோவில் நிர்வாகம் மற்றும் நிர்மோகி அகாரா அமைப்பு ஆகியோர் சமமாக பிரித்து உபயோகப்படுத்த அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் அஷோக் பூஷண், நஜீப் அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது.

அப்போது,  வழக்கு தொடர்பாக சில ஆவணங்கள் மற்றும் மொழிபெயர்ப்புகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டியது இருப்பதால், இவ்வழக்கை மார்ச் 14ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் கூறினர்.

இதற்கிடையில்  வாழும் கலை அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் முஸ்லிம் மத அமைப்பின் மவுலானா சல்மான் நத்வி ஆகியோர் அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணுமாறு ஆலோசனை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அயோத்தி நில விவகாரம் தொடர்பாக உள்ளுளூர் இஸ்லாமியர்கள் கூடி விவாதித்தனர். அப்போது, இந்த வழக்கில் தொடர்புடைய மனுதாரர்களான  ஹாஜி மெஹபூப், இக்பால் அன்சாரி, முகமது உமர் ஆகியோர் அடங்கிய குழுவினர் சமரசத்தை ஏற்க மறுத்தனர்.

இதையடுத்து,  ‘அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மட்டுமே, முஸ்லிம்கள் ஏற்பர். நீதிமன்றத்துக்கு வெளியே செய்யப்படும் சமரசத்தை ஏற்க முடியாது’ என, தீர்மானம் நிறைவேற்றினர்.