லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் வளாகத்தை விரிவுபடுத்த  அருகிலிருந்த 676.85 சதுர மீட்டர் நிலப்பரப்பை ஸ்ரீராம் ஜன்மபூமி அறக்கட்டளை ரூ.1 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

அயோத்தியில் 70 ஏக்கர் நிலப்பரப்பில் ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந் நிலையில், வளாக சுற்றளவை அதிகரிக்கும் வகையில் அருகிலிருந்த நிலப்பரப்பு விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.

நிலத்துக்குச் சொந்தக்காரரான சுவாமி தீப்நாராயணனிடமிருந்து ரூ.1 கோடி கொடுத்து அந்த நிலத்தை அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் வாங்கியிருப்பதாகவும், பத்திரப்பதிவும் முடிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோயில் வளாகத்துக்கு அருகில் இருக்கும் நிலம் மற்றும் பழைய வீடுகளை வாங்கி, சுற்றளவை அதிகரிப்பது என்ற ராமர் கோயில் கட்டும் பணி திட்டத்தின் அடிப்படையில் இந்த நிலம் வாங்கப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, ராமர் கோயில் கட்ட 70 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.