இந்துத்வா அமைப்பின் தர்மசபை : பதட்டத்தில் அயோத்தி

யோத்தி

விஸ்வ இந்துபரிஷத் நடத்தும் தர்மசபை கூட்டத்டை ஒட்டி ஏராளமான இந்துத்வா ஆர்வலர்கள் குவிந்துள்ளதால் அயோத்தி நகரில் பதட்டம் நிலவுகிறது.

அயோத்தி ராமர் கோவில் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் அடுத்த ஆண்டுஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைத்தது. இதற்கு இந்துத்வா அமைப்பினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசு ராமர் கோவில் அமைக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும் என பலர் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.

அந்த கோரிக்கையை வலியுறுத்தி விஸ்வ இந்து பரிஷத் சார்பில் தர்ம சபை கூட்டம் நாடெங்கும் மூன்று இடங்களில் இன்று நடைபெறுகிறது.

அந்த இடங்களில் ஒன்றான அயோத்தியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கூடி உள்ளனர். முன்பு பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் கூடிய கூட்டத்தை விடவும் இது அதிகமானது என பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து வி இ ப செய்தி தொடர்பாளர் சரத் சர்மா, “இந்த தர்மசபை கூட்டம் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே நடைபெறுகிறது. இந்த கூட்டத்தினால் இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்னையும் வராது. அவர்கள் பயப்படத் தேவை இல்லை. எந்த ஒரு வதந்தியையும் இஸ்லாமிய்ர்கள் நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

தர்மசபை கூட்டத்தை ஒட்டி நகரெங்கும் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இங்கு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. தீவிர பாதுகாப்பினால் உள்ளூர் மக்கள் நடமாட்டமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.