Random image

இனி அயோத்தியை வைத்து வியாபாரம் செய்ய முடியாது : யஷ்வந்த் சின்ஹா

 

டில்லி

யோத்தி வழக்கு குறித்து முன்னாள் பாஜக அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜக கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு தேர்தலிலும் ராமர் கோவில் அமைக்கப்போவதாக வாக்குறுதி கொடுத்து வருகிறது.  சென்ற முறை மக்களவை தேர்தலில் இதே வாக்குறுதி கொடுத்து ஆட்சி அமைத்த பிறகும் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலாத நிலை இருந்தது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் அதே வாக்குறுதி சட்டப்பூர்வமாகக் கோவில் அமைக்கப்படும் என வழங்கப்பட்டது.   நேற்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   இது குறித்துப் பல தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் பாஜக அமைச்சரும் தற்போது பாஜகவில் இருந்து விலகி இருப்பவருமான யஷ்வந்த் சின்ஹா, “அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்ததற்கு இறைவனுக்கு நன்றி.  அரசியலில் இதை வைத்து இத்தனை வருடமாக வியாபாரம் செய்தவர்களின் கடைகளை இந்த தீர்ப்பு மூடி விட்டது.   இனி இந்த விவகாரம் நம்மிடம் உள்ளது.  இனி நம்மைப் போல் ஊடகங்களும் மிகுந்த பொறுப்புடன் நடக்க வேண்டும்” என் டிவிட்டரில்  பதிவு இட்டுள்ளார்.