பதஞ்சலியின் கொரோனா ஒழிப்பு மருந்து : ஆயுஷ் அமைச்சகம் விளம்பர தடை

ரித்வார்

பிரபல யோகா ஆசிரியர் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனா மருந்துக்கு  விளம்பரம் செய்ய மத்திய ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்துள்ளது.

உலகெங்கும் மகளை அச்சுறுத்தி  வரும் கொரோனா சிகிச்சைக்கு மருந்து கண்டறியப் பல நாடுகளும் முயன்று வருகின்றன.   இதில் இந்தியாவைச் சேர்ந்த பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனமும் முயற்சி செய்து வந்தது.   பிரபல யோகா ஆசிரியர் பாபா ராம் தேவின் நிறுவனமான பதஞ்சலி நிறுவனம் கொரோனா நோய்க்கான மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தது.

இந்த மருந்தை பயன்படுத்தி 3 நாட்களில் 69% கொரோனா நோயாளிகளும் 7 நாட்களில் 100% நோயாளிகளும் குணம் அடைந்துள்ளதாகச் செய்தியாளர்களிடம் பாபா ராம்தேவ் தெரிவித்தார்.   இந்த மருந்துக்கு திவ்யா கொரோனா கிட் எனப் பெயரிடப்பட்டுள்ளது   இந்த செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு பதஞ்சலி நிறுவனம் இந்த மருந்துக்கான விளம்பரங்களை வெளியிட்டது.

இந்நிலையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா சிகிச்சைக்கான ஆயுர்வேத மருந்து குறித்த செய்திகளை அமைச்சகம் அறிந்துக் கொண்டது.  இந்த நிறுவனத்தின் மருந்து குறித்த விஞ்ஞான ஆய்வு மற்றும் இதன் உண்மைத் தன்மை பற்றி அமைச்சகத்துக்கு ஒன்றும் தெரியாமல் உள்ளது.

எனவே இது குறித்த அனைத்து தகவல்களும் ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும்.  அதாவது இந்த மருந்தின் பெயர், இதில் உள்ள மருந்துகளின் கலவை குறித்து விவரங்கள்,  இந்த மருந்து கொரோனாவை குணப்படுத்துகிறது என்பதற்கான நிரூபணம்,  ஆய்வு செய்யப்பட்ட மருத்துவமனை மற்றும் நோயாளிகள் விவரம்,  இந்த ஆய்வுக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதி விவரங்கள் ஆகிய அனைத்து தகவல்களும் நிறுவனம் அளிக்க வேண்டும்.

இந்த தகவல்களை ஆய்வு செய்த பிறகு ஆயுஷ் அமைச்சகம் இது குறித்த அய்வு  அறிக்கையைத் தயார் செய்யும்.  அதுவரை இந்த மருந்துகள் குறித்து எவ்வித விளம்பரமும் செய்யக்கூடாது   இந்த மருந்து குறித்த விவரங்களை  அளிக்குமாறு உத்தரகாண்ட் மாநில மருந்து தயாரிப்பு உரிமம் வழங்கும் துறைக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது” எனக் காணப்படுகிறது.