டெல்லி: ஆயுஷ் முதுகலைப் படிப்புகளுக்கான முதல்கட்டக் கலந்தாய்வு முடிவுகளை ஆயுஷ் மத்தியக் கலந்தாய்வுக் குழு வெளியிட்டுள்ளது.

ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம், ஓமியோபதி ஆகிய மருத்துவப் படிப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஆயுஷ் என்று அழைக்கப்படுகின்றன. ஆயுஷ் படிப்புகளுக்கான கலந்தாய்வை ஏஏசிசிசி என்று அழைக்கப்படும் ஆயுஷ் மத்தியக் கலந்தாய்வுக் குழு நடததியது. இந்த நிலையில், தற்போது  ஆயுஷ் பட்ட மேற்படிப்புகளுக்கான முதல்கட்டக் கலந்தாய்வு முடிவுகளை ஏஏசிசிசி வெளியிட்டுள்ளது.

தரவரிசை,  ல்லூரிகளில் உள்ள காலி இடங்கள் மற்றும் இட ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வர்களுக்கு மருத்துவ முதுகலை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கலந்தாய்வு முடிவில் தேர்வு செய்யப்பட்டுள்ள தேர்வர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் டிசம்பர் 19 (இன்று) முதல் 28ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் பிற முதுநிலை மாணவர் சேர்க்கைப் பணிகளை முடித்தபிறகு சேர்க்கை ஆணை வழங்கப்படும். முதல்கட்டக் கலந்தாய்வில் கலந்துகொண்ட, தகுதியான தேர்வர்கள் ஆயுஷ் முதுகலை இரண்டாம் கட்டக் கலந்தாய்விலும் கலந்துகொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: https://aaccc.gov.in/aacccpg/home/homepage