ஆயுஷ்மான் பாரத் காப்பிடு மூலம் மக்கள் பணம் தனியாருக்கு செல்கிறது : எய்ம்ஸ் மருத்துவர்கள்

டில்லி

ய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்ட பொது சுகாதார நிபுணர்கள் குழு ஆயுஷ்மான் பாரத் காப்பீடு மூலம் மக்கள் பணம் தனியாருக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் என்னும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பலரும் இணைக்கப்பட்டுள்ளனர்.  இந்த திட்டத்தின் மூலம்  ஒரு  குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரையில் மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.    இந்த சிகிச்சைகளை அரசு மருத்துவமனையில் மட்டுமின்றி குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளிலும் பெற்றுக் கொள்ளலாம்.

இது குறித்து சமீபத்தில் பொது சுகாதார நிபுணர்கள் குழு ஒன்று கருத்தரங்கம் நடத்தி உள்ளது.  ”ஆயுஷ்மான் பாரத் : உண்மையா அல்லது கதையா” என்னும் தலைப்பில் கருத்தரங்கம்  நடத்திய இந்தக் குழுவில் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர்.   இந்த கருத்தரங்கில் இந்த திட்டம் குறித்து முழுவதுமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

அந்த கருத்தரங்கில், “பொதுவாக இதற்கு முன்பு இத்தகைய திட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் வசதிகள் அதிகரிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும்.   ஆனால் தற்போது அதே திட்டம் காப்பீடு என்னும் பெயரில் தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது.  இது கிட்டத்தட்ட புதிய பாட்டிலில் அடைக்கப்பட்ட பழைய  மது என கூறலாம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மருத்துவத் துறை தலைவர் டாக்டர் விகாஸ் பாஜ்பாய், “இது போல பொது மக்களின் பணத்தினால் தொடங்கப்பட்ட  பல காப்பீட்டு திட்டங்கள் தோல்வி அடைந்துள்ளன   இதற்கு காரணம் இந்த திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப் படாததாகும்.   குறிப்பாக சிகிச்சை முறைகளை விட நோய் தடுக்கும் முறைகளில் கவனம் செலுத்த வேண்டும்” என கூறி உள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனையின் பயோ கெமிஸ்டிரி துறை தலைவர் சுப்ரதோ சின்ஹா, “இந்த திட்டத்தில் வெளி சிகிச்சை நோயாளிகள் சேர்க்கப்படவில்லை.  அதிகமான நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை.    எந்த ஒரு பொது சுகாதார திட்டமும் அனைத்து வகை சிகிச்சைகளுக்கும் காப்பீடு அளிக்கப்பட்டால் தான் முழு அளவில் நன்மை அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவரான பிரதாப் சரண், “அரசு மக்களுக்கு முழுமையான மருத்துவ வசதிகள் அளிக்காமல்  தனியாரிடமிருந்து அதைப் பெறுவாது தவறானது.   இதனால் அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிக்கிறது எனவே பொருளாகும்.   இந்த காப்பிட்டு திட்டத்தில் மக்களின் பணம் உள்ளது.   அரசின் இந்த காப்பிட்டு திட்டம் மக்களின் பணத்தை தனியாருக்கு அளிக்க வகை செய்யும் திட்டமாகும்” என தெரிவித்துள்ளார்.