அய்யப்பன் கோவில் விவகாரம்: கேரளாவில் தொடரும் கண்டன பேரணி

திருவனந்தபுரம்:

பரிமலையில் பெண்களை அனுமதிக்க உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து, இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரமண்ட கண்டன பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கில் கட்சியினர் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. மாநில அரசு உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்த மும்முரம் காட்டி வருகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்பு,  ஆச்சாரத்திற்கு எதிரானது என்றும், தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் எனவும் அய்யப்ப பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து அய்யப்ப பக்தர்கள் சபரிமலையை பாதுகாப்போம் என்ற கோ‌ஷத்துடன் போராட்டத்தில் குதித்தனர்.  இவர்களுடன் சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரிகள், சபரிமலை கோவிலுடன் தொடர்புடைய பந்தளம் ராஜகுடும்பத்தினர் கைகோர்த்து மாநிலம் முழுவதும் போராட்டத்தை துரிதப்படுத்தினர்.

பாரதிய ஜனதா கட்சி மற்றும் சபரிமலையை பாதுகாப்போம் அமைப்பு ஆகியவை இணைந்து கடந்த 10-ந்தேதி பந்தளத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கண்டன பேரணி தொடங்கினர்.

இந்த பேரணியில் லட்சக் கணக்கான பெண்களும், அய்யப்ப பக்தர்களும் கலந்து கொண்டனர். அவர்கள்  பம்பை, நிலக்கல், பந்தளம், எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோழிக்கோடு, பாலக்காடு, பாறசாலை என மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த போராட்டம் தீயாய் பரவியது. இதற்கிடையில் போராட்டக்காரக்ரள் முக்கிய நகரங்கள் வழியாக  திருவனந்தபுரம் வந்து சேர்ந்தனர். சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அலுவலகம், தேவசம் போர்டு மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன் ஆகியோர் வீடுகளையும் முற்றுகையிட்டனர்.

அதைத்தொடர்ந்து, முதல்வர்  பினராய் விஜயன் வீடு நோக்கி புறப்பட்ட பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பேரணியில் வந்தவர்கள் அங்கேயே தங்கினர்.

இன்று பேரணியில் வந்தவர்கள் திருவனந்தபுரம் தலைமைச்செயலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்ற சர்வதேச இந்து பரி‌ஷத் தலைவர் பிரவின் தொகாடியா கூறியதாவது:-

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக கேரளாவில் வரலாறு காணாத போராட்டங்கள் நடைபெறுகிறது. இதனை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும். பக்தர்களின் மத உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். இந்த தீர்ப்பை முறியடிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் 2 நாட்களில் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். இல்லையேல் 17-ந்தேதி நள்ளிரவு முதல் 18-ந்தேதி நள்ளிரவு வரை 24 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். அவசர சட்டம் கொண்டுவரா விட்டால் மத்திய அரசை இந்துக்களுக்கு எதிரான அரசாக கருதுவோம் என்று  கூறினார்.

இதற்கிடையே சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காக நாளை மறு நாள் (17-ந்தேதி) மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட இருக்கிறது. சுத்தி பூஜைக்கு பிறகு மறுநாள் 18-ந்தேதி அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அப்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பெண்களும், பெண் ஆர்வலர்களும் வர இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.

இதன் காரணமாக  அங்கு பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகிறது.  பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கா மல் ஆச்சாரங்களுக்கு எதிராக கோவிலுக்கு வரும் பெண்களை தடுப்போம் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.  இதன் காரணமாக கேரளாவில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி நாயர் சர்வீஸ் சொசைட்டியின் அய்யப்ப பெண் பக்தர்கள் சங்கம், தந்திரி குடும்பத்தினர், பந்தளம் ராஜகுடும்பம் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் 10-க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் தசரா பண்டிகை விடுமுறைக்கு பிறகே சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.