பரபரப்பு, பதற்றத்திற்கு தற்காலிக ஓய்வு: அய்யப்பன் கோவில் நடை இன்று இரவு சாத்தப்படுகிறது

பம்பா:

ண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட சபரிமலை அய்யப்பன் கோவில், இன்று இரவு பூஜையுடன் நடை சாத்தப்படுகிறது. இதன் காரணமாக பதற்றமும், பரபரப்பும் தற்காலிகமாக ஓய்வு பெறும் என நம்பப்படுகிறது.

சபரிமலை சபரிமலை அய்யப்பன் கோவில்  மண்டல  பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி மாலை நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 40 நாட்களாக பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து வந்த அய்யப்ப பக்தர்கள் கோவிலுக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில், மண்டலபூஜை  இன்றுடன்  நிறைவடைவதையொட்டி, இன்று இரவு நடை சாத்தப்படுகிறது.

அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என  உச்சநீதி மன்ற தீர்ப்பை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக கேரளாவில் பரபரப்பையும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.  மாநிலம் முழுவதும் பாஜக உள்பட இந்துத்துவா அமைப்புகள் உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன.

இதற்கிடையில், அய்யப்பன் கோவில் விவகாரத்தில், பல்வேறு பெண்கள் அமைப்பினர் கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்வதும், அவர்களை பக்தர்கள் விரட்டியடிப்பதும் நடந்து வருகிறது.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த மனிதி என்ற பெண்கள் அமைப்பினரும் சபரிமலை செல்ல முயன்று திருப்பி அனுப்பப்பட்டனர். இதன் காரணமாக பரபரப்பு நிலவியது. சபரிமலையை சுற்றி உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டு  ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில், தினசரி பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று இரவுடன்  கோவிலின் நடை சாத்தப்படுவதால், காவல்துறையினர் சற்று நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.‘

இன்று இரவு தந்திரியின் பூஜைக்கு பின்பு சன்னிதானத்தின் நடை இன்று இரவு சாத்தப்பட்டு மண்டல பூஜை நிறைவு பெறுகிறது.

இதனைத்தொடர்ந்து மகரவிளக்கு பூஜைக்காக கோயிலின் நடை வருகிற 30ம் தேதி மாலை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.