அய்யப்பன் விவகாரம் விசுவரூபம்: கலவர பூமியாக மாறும் கேரளா… குண்டு வீச்சு…

திருவனந்தபுரம்:

பரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை காவல்துறை உதவியுடன் மாநில அரசு அழைத்துச் சென்ற விவகாரம் கேரளாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற வந்த நிலையில் கம்யூனிஸ்டு எம்எல்ஏ வீடு மீது குண்டு வீச்சு சம்பவங்களும் நடந்தேறி உள்ளன.

சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கேரளாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உச்சநீதி மன்ற தீர்ப்பை நிறை வேற்றுவதில் மாநில அரசு தீவிரம் காட்டி வந்தது. ஆனால், அதற்கு அய்யப்ப பக்தர்களும், தந்திரி அமைப்புகள் மற்றும் பந்தளம் அரச குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பாக மாநிலத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், ஜனவரி 1ந்தேதி மாநில பினராயி அரசு, கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமிய பெண்களை கொண்டு, இந்து பாரம்பரியத்துக்கு எதிராக மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தியது.

இதன் காரணமாக மாநிலத்தில் சபரிமலை விவகாரம் மேலும் விசுவபமெடுத்தது. இந்த நிலையில் கடந்த 2ந்தேதி அதிகாலை கோவிலின் பின்வாசல் வழியாக 2 பெண்களை மப்டி உடைஅணிந்த காவல்துறையினர் பாதுகாப்புடன் சன்னிதானத்திற்குள் அழைத்துச் சென்றது. இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமாகியது.  . இதைத் தொடர்ந்து  மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் சபரிமலை சென்றார். இதைத்தொடர்ந்து மாநிலத்தின்  பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பல இடங்களில் வன்முறை வெடித்தது. அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

இதற்கிடையில் பந்தளத்தில் ஏற்பட்ட வன்முறையில் வலதுசாரி ஆர்வலர் ஒருவர் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதன் காரணமாக சபரிமலை விவகாரம் மேலும் சூடுபிடித்தது.  இதனால் கேரளாவில் மக்களின்  இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மலப்புரம் தவலூரில், உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். அதுபோல   கொட்டாரக்கரையில், பாஜக – மார்க்சிஸ்ட் தொண்டர்கள் இடையே மோதல் வெடித்தது. நெடுமங்காடு காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், உதவி ஆய்வாளர் ஒருவர் காயமடைந்தார்.

வன்முறையாளர்களை  போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும்  கலைத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். வன்முறை காரணமாக பாலக்காடு, மஞ்சேசுவரம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கேரளாவின் கண்ணூர் நகரில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. ஷம்சீர் வீட்டின் மீது நேற்று இரவு 10.15 மணியளவில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. கேரளாவில் தொடந்து வன்முறை காரணமாக பதற்றம் நிலவி வருகிறது.

வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 801 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும்,  1369 போராட்டக்காரர்கள் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்  717 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.