டில்லி

பாஜக உறுப்பினர் ரமாதேவி குறித்து ஆபாசமாகப் பேசியதற்கு சமாஜ்வாதி கட்சி மக்களவை  உறுப்பினர் ஆசம் கான் மன்னிப்புக் கோரி உள்ளார்.

கடந்த 25 ஆம் தேதி முத்தலாக் சட்ட மசோதா மீதான விவாதம் நடந்த போது சபாநாயகர் இல்லாததால் பாஜக பெண் உறுப்பினர் ரமாதேவி அவையை நடத்தி வந்தார்.   அப்போது சமாஜ்வாதி கட்சி மக்களவை உறுப்பினர் ரமா தேவியைக் குறித்து ஆபாசமாகப் பேசி உள்ளார்.   இதற்குப் பெண் உறுப்பினர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ஆசம் கானுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடும் கண்டனம் தெரிவித்தார்.  அவர் பாஜக  உறுப்பினர் ரமாதேவியிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனக் கூறினார்.  பல பெண் உறுப்பினர்கள் ஆசம் கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரை வலியிறுத்தினர்.  இது சர்ச்சையை உண்டாக்கியதால் ஆசம் கான் மன்னிப்பு கோரினார்.  ஆனால் ரமாதேவி மன்னிப்பை ஏற்க முடியாது என அறிவித்தார்.

இதையொட்டி இன்று காலை சபாநாயகர் ஓம்பிர்லா தனது அறையில் சமாஜ்வாதி கட்சி தலைவர்  அகிலேஷ் யாதவ், உறுப்பினர் ஆசம் கான் மற்றும் பாஜகவின் ரமாதேவி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.    அதன் பிறகு மக்களவையில் ஆசம் கான் ரமாதேவியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.  சபாநாயகர் இனி இவ்வாறு நடக்கக் கூடாது என எச்சரித்து மன்னிப்பை ஏற்றுக் கொண்டார்.