கர்நாடக மாநிலத்தின் உண்மையான முதல்வர் பி.ஒய். விஜயேந்திரா?

பெங்களூரு: முதல்வர் யெடியூரப்பா தனது மகன் பி.ஒய். விஜயேந்திராவை முன்னிலைப்படுத்துவதன் மூலம் கர்நாடக பாஜகவில் கிளர்ச்சி ஏற்படக் காரணமாக இருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

பாஜகவில் ஒரு பிரிவினர், யெடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவை “உண்மையான“ முதலமைச்சர் என்றும், முதலமைச்சரின் கையொப்பத்தைப் பெறுவதற்கு விஜயேந்திரா மூலம் கோப்புகளை நகர்த்த வேண்டியுள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.

மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்திய அநாமதேய கடிதத்திலும் இந்தக் குற்றச்சாட்டுகள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. அக்கடிதம் கர்நாடக முதல்வர் செயல்படும் விதத்தை விமர்சித்ததுடன் விஜயேந்திரா சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும் அக்கடிதத்தில், யெடியூரப்பாவுக்கு வயது சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதால் அவர் பலவீனமாகவும் மற்றும் செயலற்ற நிலையில் இருப்பதாகவும், அவ்வாறு அவரைக் காண்பது வேதனையாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. வரும் 27ம் தேதியன்று அவருக்கு 77 வயதாகப்போகிறது.

குற்றச்சாட்டுகளின் தொடர்ச்சியாக, நிர்வாக சிக்கல்களை தீர்ப்பதற்காக தம்மை அணுகும் சட்டமன்ற உறுப்பினர்களையும், கட்சித்தலைவர்களையும் தனது மகன் விஜயேந்திராவை சந்திக்குமாறு யெடியூரப்பா உத்தரவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இறுதியாக, வேறு எந்த வீரசைவ லிங்காயத் தலைவரையும் யெடியூரப்பா அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுடன், அவரது நீண்டகால அரசியல் அனுபவத்தை கருத்தில் கொண்டு அவர் ஒரு அரசியல் வழிகாட்டியாக விளங்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.