பாஜக அரசை கடுமையாக விமர்சிக்கும் பாபா ராம்தேவ்
டில்லி
பிரபல யோகா ஆசிரியர் பாபா ராம்தேவ் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு நெருங்கிய நண்பரும் பாஜகவின் தீவிர ஆதரவாளருமான பாப ராம்தேவ் பதஞ்சலி நிறுவன உரிமையாளர் ஆவார். பிரபல யோகா ஆசிரியரான இவருடைய நிறுவனத்துக்காக பாஜக அரசு குறைந்த விலையில் நிலம் உள்ளிட்ட பல சலுகைகளை வழங்கி உள்ளது. மோடி குஜராத் முதல்வராக ஆனதற்கும் பிரதமராக பதவி ஏற்றதற்கும் இவரும் மிகவும் பாடுபட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.
சமீபத்தில் ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சி இளைஞர்கள் நிகழ்வு ஒன்றை நடத்தியது. அதில் பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். அவர்களில் பாபா ராம்தேவ் ஒருவர் ஆவார். இந்த நிகழ்வில் அவர் பாஜக அரசை கடுமையாக விமர்சித்தது பலருக்கும் வியப்பை உண்டாக்கி உள்ளது.
இந்நிகழ்வில் பாபா ராம்தேவ், “நான் தற்போது அரசியலில் இருந்து முழுவதுமாக விலகி உள்ளேன். வரபோகும் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் நான் பிரசாரம் செய்யப் போவதில்லை. நான் ஒரு விஞ்ஞான சன்யாசி. என்னுடைய பதஞ்சலி நிறுவனத்துக்கு 300 கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் அவர்களுடைய பங்களிப்பை தந்துள்ளனர்.
தற்போது இளைஞர்களிடையே உள்ள அனைத்து மன குழப்பங்களுக்கும் வேலை இன்மையே முக்கிய காரணியாக உள்ளது. ஒரு தொழிலதிபராகவும் யோகா ஆசிரியரகவும் நான் பல வேலை வாய்ப்புக்களை உருவாக்கி உள்ளேன். அதே நேரத்தில் பிரதமர் அவ்வாறு செய்யாமல் உள்ளார். என்னால் வரும் ஆறு மாதத்தில் 2.5 லட்சம் வேலை வாய்ப்புக்களை உருவாக்க முடியும். ஆனால் பாஜக அரசு இதுவரை எத்தனை வேலை வாய்ப்பை உருவாக்கி உள்ளது?
தினம் தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்த விஷயத்தில் பிரதம்ர் மோடி தம்மை ஒரு சாமானியனின் நிலையில் வைத்து யோசிக்க வேண்டும். இல்லையெனில் மோடி இந்த விவகாரத்தால் மீண்டும் பிரதமராக முடியாத நிலை உண்டாகும். அரசு வரிச்சலுகை அல்லது ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு வந்தால் என்னால் பெட்ரோலை லிட்டருக்கு ரூ.35-40 க்கு விற்க முடியும். ” என உரையாற்றினார்.
ஆனால் நிகழ்வின் இறுதியில் திடீரென தனது பேச்சின் போக்கை மாற்றியுள்ளார். அவர், “மக்கள் பிரதமர் மோடியை குறை சொல்வது அவர்கள் உரிமை. அனால் அவர் செய்துள்ள நல்லவைகளையும் அவர்கள் நினைக்க வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தில் யாராலும் எந்த குறையும் சொல்ல முடியாது. அதே போல ரபேல் பேர விவகாரத்திலும் அரசியல் காரணமாகவே அவர் மீது குறை சொல்கிறார்கள்” என கூறி சமாளித்துள்ளார்.