டில்லி:

வெளிநாட்டு நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் வகையில் தொழில் விரிவாக்கத்திற்கு ரூ. 5 ஆயிரம் கோடி கடன் வாங்க பதஞ்சலி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவ் பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது குறித்து ராம்தேவ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வெளிநாட்டு நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கவும், தொழில் விரிவாக்கத்திற்கும் ரூ. 5 ஆயிரம் கோடி கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் முதல் கட்டமாக ரூ.500 கோடியை பதஞ்சலி நிறுவனம் கடனாக பெற்றுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் பதஞ்சலி நிறுவனம் ரூ. 2 லட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனமாக விளங்கும். அடுத்த 2 ஆண்டுகளில் ரூ. 1 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக விளங்கும்.

அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 1 லட்சம் கோடி வர்த்தகம் மேற்கொள்ளும் நிறுவனமாக பதஞ்சலி இருக்கும். பல கோணங்களில் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ. 10 லட்சம் கோடி வர்த்தகம் கொண்ட இந்த சந்தையில் பதஞ்சலியின் பங்கு அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் 10 முதல் 20 சதவீதமாக இருக்கும்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ஒரு லட்சம் கோடி ரூபாய் வர்த்தகத்தை கடந்த நிறுவனமாக பதஞ்சலி மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், ஆடை, குடிநீர், செக்யூரிட்டி சேவை, பால் பொருட்கள் போன்ற இதர தொழில்களிலும் ஈடுபடும் திட்டம் உள்ளது. கடந்த 2016&17ம் நிதியாண்டில் ரூ. 10 ஆயிரத்து 561 கோடி மதிப்பிலான வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டது’’ என்றார்.

முதல் 10 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இந்நிறுவன நிர்வாக இயக்குனரும், சி.இ.ஓ.வுமான ஆச்சார்யா பாலகிருஷ்ணா இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இவர் 25வது இடத்தில் இருந்தார். இவரது சொத்து 173 சதவீதம் அதிகரித்துள்ளது. அதோடு கடந்த போர்ப்ஸ் வெளியிட்ட 100 பணக்கார இந்தியர்களின் பட்டியலில் இவர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.