அடுத்த பிரதமர் யார் என தற்போது சொல்ல இயலாது : பாபா ராம்தேவ் அதிரடி

துரை

டுத்த பிரதமர் யார் என்பதை தற்போது சொல்ல இயலாது என பதஞ்சலி யோகா நிறுவனர் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

பாஜகவிற்கு மிகவும் ஆதரவாளர் என அறியப்பட்டவர் யோகா ஆசிரியர் பாபா ராம்தேவ்.    இவரது பதஞ்சலி நிறுவனத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்களில் பல வரிச் சலுகைகளும் சலுகை விலையில் நிலமும் அளிக்கப்பட்டுள்ளது.   இது கடும் சர்ச்சையை உண்டாக்கியது.   சமீப காலமாக பாபா ராம்தேவ் பாஜகவுக்கு எதிராக பேசி வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி பேட்டியின் போது தாம் அரசியலில் இருந்து விலகி உள்ளதாகவும் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்திருந்தார்.   கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அவர் பாஜகவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்த நிலையில் இவ்வாறு தெரிவித்தது பரபரப்பை உண்டாக்கியது.

நேற்று பாபா ராம்தேவ் மதுரையில் ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.   அந்த சந்திப்பில் பாபா ராம்தேவ், ”அரசியல் நிலமை தற்போது கணிக்க முடியாத நிலையில் உள்ளது.   வரும் 2019 மக்களவை தேர்தலில் யார் வெல்வார்கள் எனவோ யார் பிரதமர் ஆவார்கள் எனவோ தற்போது நம்மால் சொல்ல இயலாது.

இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்பதை மட்டுமே நம்மால் கூற இயலும்.   நான் முன்பு சொன்னது போல யாருக்கும் இந்த தேர்தலில் ஆதரவு அளிக்கப்போவது இல்லை.   எங்களுக்கு மதச் சார்பற்ற இந்தியா அல்லது இந்தி மத இந்தியா என எதுவும் தேவை இல்லை.    ஆன்மிகம் மிகுந்த இந்தியா மட்டுமே தேவை” என தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மூன்று மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ள நிலையில் பாபா ராம்தேவ் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.