டில்லி:

நாடு முழுவதும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில், 3வது குழந்தை பெற்றால், அந்த குழந்தை மற்றும் அதன் பெற்றோர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பறிக்க வேண்டும் என்று யோகா குரு பாபாராம்தேவ் கூறியிருந்தார். இதற்கு பதில் தெரிவித்துள்ள ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி , பிரதமர் மோடி 3வது குழந்தை, அவருக்கும் வாக்குரிமை பறிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

உலக மக்கள் தொகையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. மேலும் மக்கள் தொகை பெருகாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஹரித்துவாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாபாராம்தேவ், நாட்டில் மக்கள் தொகையை 150 கோடிக்கும் மேல் அனுமதிக்க முடியாது என்றவர், அதைச் சமாளிக்க இந்தியா தயாராக இல்லை.

எனவே மத்தியஅரசு 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால், பிறக்கும் மூன்றாவது குழந்தைக்கு அல்லது பெற்றோருக்கு வாக்குரிமையைப் பறிக்க வேண்டும். அந்தக் குழந்தை தேர்தலில் போட்டியிடவும், அரசின் சலுகைகள், சேவைகளைப் பெறவும் தடை விதிக்க வேண்டும், அதற்காக புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதற்கு பதில் தெரிவித்துள்ள ஓவைசி, நாட்டின் சட்டவிரோதமான விஷயங்களைச் சொல்வதை தடை செய்ய எந்த சட்டமும் இல்லை. அப்படி இருக்கும்போது, ராம்தேவ் கூறும் யோசனைகள் எல்லாம் மக்களின் கவனத்தை ஈர்க்கப்போகிறதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும்,  பாபா ராம்தேவ் தனது வயிற்றின் மூலம், தனது காலின் மூலம் எளிதாக யோகா செய்யலாம். ஆனால், சட்டம் இயற்றுவது அப்படியல்ல. மூன்றாவது குழந்தை வாக்குரிமை இழக்கும் என்றால், நரேந்திர மோடியும்தான் வாக்குரிமையை இழப்பார்.  ஏனென்றால் அவருடைய குடும்பத்தில் அவர் மூன்றாவது குழந்தைதான்  எனத் தெரிவித்துள்ளார்.