லக்னோ:

உ.பி. பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் ரூ. 700 கோடி மதிப்பிலான டெண்டரை எடுக்க பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம் டில்லியில் காய்களை நகர்த்தி வருகிறது. இந்த திட்டம் தற்போது தன்னார் தொண்டு நிறுவனங்கள் உள்பட 10 அமைப்புகள் செயல்படுத்தி வருகிறது.

மாநிலம் முழுவதும் உள்ள 10 கோடி குழந்தைகளுக்கு சர்க்கரை, நெய், கோதுமை கலந்து செய்யப்படும் பஞ்சிரி என்ற உணவு, பழம், பால் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. பாபா ராம்தேவில் பதஞ்சலி நிறுவனம் தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவில் முதல் மிகப் பெரிய 10 நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இவர்களின் வர்த்தகம் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் உத்தர்காண்ட் மாநிலத்தில் ஆயுர்வேத தாவரங்களை மேம்படுத்தும் மிகப் பெரிய ஒப்பந்தத்தை தன்னிச்சையாக வெற்றி பெற்றுள்ளது. மேலும், இந்தியாவில் வளர்ந்து வரும் நுகர்வோர் பொருள் நிறுவனமாக பதஞ்சலி விளங் குகிறது.

அதேசமயம் தவறான விளம்பரங்களை மேற்கொண்டு பிரச்னைகளில் இந்நிறுவனம் சிக்கி தவித்து வருகிறது. ராணுவ கேண்டீன்களின் பதஞ்சலியின் நெல்லிக்காய் ஜூஸ் விற்பனை குடிப்பதற்கு ஏற்றதல்ல என்று கூறி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் மஜூலியில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு காலாவதியான பொருட்களை விநியோகம் செய்ததாக மீடியாக்களில் செய்தி வெளியாயின. உ.பி. மதிய உணவு திட்ட டெண்டரை பதஞ்சலி நிறுவனம் தக்கவைத்துக் கொண்டால் இது மிகப்பெரிய வெற்றியாக அந்நிறுவனத்திற்கு அமையும்.

மாநில முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு உயர் ஊட்டச்சத்து உணவு பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனமாக விளங்கும். இந்நிறுவனத்தில் ஹரிதுவார் கிளையின் மூத்த அதிகாரிகள் இந்த டெண்டரை பெற மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்து காய்களை நகர்த்தி வருகின்றனர்.
இதற்கான ஒப்பந்த நகலை வரும் அக்டோபர் மாதம் வரை சமர்ப்பிக்கலாம் என்று காலக்கெடு சமீபத்தில் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.