டில்லி : உயிருள்ள குழந்தையை இறந்ததாக கூறி பார்சல்

டில்லி

டில்லி அரசு மருத்துவமனையில் பிறந்த ஒரு குழந்தை உயிரோடு இருக்கும்போதே இறந்ததாகக் கூறி பார்சல் செய்து கொடுத்துள்ளனர்.

சாந்திதேவி என்னும் 28 வயதுப் பெண் டில்லியில் வசித்து வருகிறார்,  கர்ப்பிணியான இவர் பிரசவத்துக்காக டில்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு குறை மாதத்தில் குழந்தை பிறந்ததாகக் கூறப்படுகிறது.  பிறந்த குழந்தையின் எடை 400 கிராம் இருந்ததாம்.  குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவமனையில் அறிவித்தனர்.  குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஏதுவாக ஒரு பிளாச்டிக் பையில் பார்சல் செய்துக் கொடுத்து அனுப்பினர்.

வீட்டில் இறுதிச் சடங்கு செய்ய குழந்தையை பார்சலில் இருந்து வெளியே எடுத்தால் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.  குழந்தை கை கால்களை ஆட்டிக் கொண்டு லேசாக சிணுங்கிக் கொண்டு உயிருடன் இருந்தது.

உடனடியாக அதே மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.  குழந்தை எடை குறைவாக இருப்பதாலும், குறைப்பிரசவத்தில் பிறந்ததாலும் சிகிச்சை அளிக்கப் படுகிறது.  குழந்தை நிலைமை அபாயக்கட்டத்தில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இருந்தாலும் சிகிச்சை தொடர்கிறது.

தவறான தகவல் தந்ததற்காக சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.