பிறந்து 2மணி நேரங்களில் பிளாஸ்டிக் பையில் விட்டு செல்லப்பட்ட பெண் குழந்தை

பெங்களூர் அருகே பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை பிளாஸ்டிக் பையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள ராமையா குடியிருப்பு பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 4மணிக்கு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. 47வயதான சுதா குழந்தையின் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்துள்ளார். அதன்பிறகு பூனையின் அழுகுரல் என்று நினைத்து கொண்டு மீண்டும் தூங்க சென்றுள்ளார். மறுபடியும் குழந்தையின் சத்தம் கேட்கவே சுதா மற்றும் அவரது மகன் ஸ்ரீஜித் வெளியே வந்து பார்த்துள்ளனர். அழுவது குழந்தை என்று தெரிந்த உடன் இருவரும் டார்ச் விளைக்கை எடுத்து கொண்டு தேடிப்பார்த்ததில் குழந்தை இருந்தது தெரியவந்தது.
baby
சுதாவின் வீட்டிற்கு அருகில் ஒரு பிளாஸ்டிக் பையில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் குழந்தை இருந்துள்ளது. அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுதா குழந்தையை தூக்கியுள்ளார். அப்போது குழந்தை தொப்புல் கொடியுடன் அழதுக்கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து தனது உறவினர்களுக்கு சுதா தகவல் அளித்தார். அதன்பேரில் குழந்தை கண்டெடுக்கப்பட்ட தகவல் பனஸ்வாதி போலிசாருக்கு அளிக்கப்பட்டது.

குழந்தை கிடைத்தது குறித்து சுதா கூறுகையில், ”பிளாஸ்டிக் பையை திறந்து பார்த்த போது அதில் பெண் குழந்தை இருந்தது. அந்த குழந்தை அப்போது தான் பிறந்து இருக்கும். என்னால் இதை நம்ப முடியவில்லை. குழந்தையின் தொப்புல் கொடி கூட அறுக்காமல் விட்டு சென்றுள்ளனர். குழந்தையை சுத்தம் செய்யாமல் ரத்தத்துடன் கொண்டு வந்து போட்டுள்ளனர்” என வருத்ததுடன் கூறினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அப்போது அந்த குழந்தை கண்களை கூட திறக்காமல் இருந்தது. குழந்தையை சோதனை செய்த மருத்துவர்கள் அதன் இதயத்துடிப்பு சரியாக இருப்பதாகவும், அது ஆரோக்கியமாக உள்ளதாகவும் கூறினர். குழந்தைக்கு குளிர் ஏற்பட்டதால் அது இன்குபேடரில் வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து குழந்தை கண்டெடுக்கப்பட்டது குறித்து 8.30 மணியளவில் சுதா புகார் அளித்தார். குழந்தை பிறந்து இரண்டு மணி நேரத்தில் அதனை சுதா கண்டெடுத்துள்ளார். நீதிமன்றத்தில் விசாரணைகள் முடிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை சிசு விஹார் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.