கரும்பு தோட்டத்தில் குழந்தை நரபலி? திருவாரூரில் பரபரப்பு!

திருவாரூர்,

திருவாரூர் அருகே கரும்பு தோட்டத்தில் குழந்தையின் கை, கால்கள் வெட்டப்பட்டு தனித்தனியாக கிடந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. குழந்தை நரபலி கொடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கரும்புத் தோட்டத்தில்  குழந்தையின் உடல் உறுப்புகள் தனித் தனியாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது. இதனால் அந்த குழந்தை நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மன்னார்குடி அருகேயுள்ள பைங்கா நாடு காலனித் தெருவில் வசிக்கும் சோமு என்பவருக்கு  சொந்தமான  கரும்புத் தோட்டத்தில்,  குழந்தையின் வெட்டப்பட்ட கை, கால்கள் தனித்தனியாக கிடந்தன. நாய்கள் அதை சுற்றி வந்தன.

அதைக்கண்ட சிறுவன் ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் பைங்காநாடு கிராம நிர்வாக அலுவலர் திருமக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதையடுத்து திருமக்கோட்டை  போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று குழந்தையின் உடல் உறுப்புகளை கைப்பற்றி மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் அந்த உறுப்புகள் ஆய்வுக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு டிஎன்ஏ பரிசோதனைசெய்யப்பட உள்ளது.

இது குறித்து சந்தேக மரணம் என வழக்கு பதிந்துள்ள போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை யாருடையது என்றும் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும்  குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா என்கிற கோணத்திலும்  விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.