மும்பை: 28வயது பெண்ணிற்கு பிறந்த குழந்தையின் எடை 5.3 கிலோ

மும்பையை சேர்ந்த பெண்ணுக்கு 5.3கிலோ எடை கொண்ட பெண் குழந்தை பிறந்துள்ளது. சராசரி எடையை காட்டிலும் அதிக எடையுடன் பிறந்த குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Baby

மும்பை கொலாபா பகுதியை சேர்ந்த 28 வயதுப் பெண் பிரசவத்திற்காக காமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் உதவியுடன் அந்த பெண்ணிற்கு 5.3 கிலோ எடையுடன் கூடிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்துதாயும் சேயும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியக் குழந்தைகளின் சராசரி எடை 2.5 முதல் 3.5 கிலோ ஆகும். அதிக எடையுடன் குழந்தை பிறக்கும்போது தாய்க்கு சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. பிரசவத்துக்குப் பின் அதிக ரத்த இழப்பு, கடினமான சிசேரியன் முறை, உடலுறுப்புகளுக்கு வலி ஆகியவை ஏற்படலாம்.

ஆனால் அதிக எடையுடன் கூடிய குழந்தை பிறந்தது குறித்து காமா மருத்துவமனை மருத்துவ மேற்பார்வையாளரும், மகப்பேறு மருத்துவருமான ராஜஸ்ரீ கட்கே கூறும்போது, ” பொதுவாக நீரிழிவு நோய் உள்ள தாய்களுக்கு அதிக எடை கொண்ட குழந்தைகள் பிறக்கும். ஆனால் இந்தச் சம்பவத்தில் தாய்க்கு நீரிழிவு நோய் இல்லை. தைராய்டு பிரச்சினையும் இல்லை. சிரமங்கள் எதுவும் இல்லாமலே பிரசவம் நடந்தது. தற்போது தாயும் சேயும் வார்டில் நலமாக உள்ளனர். அவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம் ” என்றார்.

2016-ல் கர்நாடகாவைச் சேர்ந்த 19 வயதுப் பெண்ணுக்கு 6.8 கிலோ எடை கொண்ட குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.