சென்னை

திமுகவின் இந்தி எதிர்ப்பு போராட்டம் நிறுத்தப்பட்டதின் பின்னணியில் சீன அதிபர் வருகை உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் இந்தியாவில் ஒரே மொழியாக இந்தி மொழி இருந்தால் நாட்டின் முன்னேற்றத்துக்கு நல்லது என தெரிவித்தார்.   இதற்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.   திமுக சார்பில் இதை எதிர்த்து போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.   இந்நிலையில் ஆளுநரைச் சந்தித்த முக ஸ்டாலின் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார்.

இதன் பின்னணி குறித்து ஊடகங்களில் பல ஊகங்கள் வெளியாகி வருகின்றன.   இந்நிலையில் செய்தி ஊடகங்களில் வெளியாகும் ஒரு செய்தி குறித்து நாம் இங்கு காண்போம்.

கடந்த 18 ஆம் தேதி மாலை 5 மணியளவில் ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த சந்திப்பின் போது ஆளுநர் பன்வாரிலால்  புரோகித் ஆங்கிலத்தில் மு க ஸ்டாலினை ஹவ் ஆர் யு எனக் கேட்டு நலம் விசாரித்துள்ளார்.   அதன் பிறகு அவர் தாம் மத்திய அரசின் பிரதிநிதி என்னும் முறையில் இந்தித் திணிப்பு இருக்காது என உறுதி அளிப்பதாகவும் அதனால் போராட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.  மேலும் அமித்ஷா தனது பேச்சுக்கு விளக்கம்  அளித்துள்ளதையும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வரும் 11 ஆம் தேதி அன்று மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஷிஜின் பிங் மற்றும் மோடி சந்திக்க உள்ளதால் இந்தி எதிர்ப்பு போராட்டத்தைக் கைவிட்டால் மட்டுமே சந்திப்பை நடத்த முடியும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.   இந்த சந்திப்பை செய்தியாக்க உலக அளவில் பத்திரிகையாளர்கள் வருவதால் அந்த நேரத்தில் போராட்டம் நடத்தினால் இந்தியாவின் மதிப்பு குறைய வாய்ப்புள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதற்கு மு க ஸ்டாலின் சார்பில் டி ஆர் பாலு சீன அதிபரின் தமிழக வருகைக்குப் பிறகு மீண்டும் இந்தி திணிப்பு நடக்குமா என கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு ஆளுநர் இனி இந்தித் திணிப்போ அல்லது ஒரே மொழி இந்தி என்னும் அறிவிப்போ இருக்காது என உறுதி அளித்துள்ளார்.   இதையொட்டி முக ஸ்டாலின் இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.   அதன் பிறகு மோடி –  ஷிஜின் பிங் சந்திப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

செய்தி ஊடகங்கள் இத்தகைய செய்தி வெளியிட்ட போதிலும் இது குறித்து திமுகவோ ஆளுநர் மாளிகையோ இந்த தகவலை உறுதி செய்யவில்லை.   மேலும் ஆளுநருடன்  முக ஸ்டாலின் சந்தித்தது குறித்த புகைப்படங்களும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.