சென்னை,

னியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள டிடிவி தினகரன் எம்எல்ஏக்கள் 19 பேரும், பாண்டிச்சேரி அழைத்துச்செல்லப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதன் காரணமாக அடுத்த கூவத்தூர் குதிரை பேரம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுகவின் இரு அணிகளும் இணைப்பை தொடர்ந்து, கட்சியில் இருந்து ஓரங்கப்பட்ட டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 19 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். மேலும், கருணாஸ், தனியரசு, அன்சாரி போன்ற கூட்டணி கட்சி உறுப்பினர்களும் டிடிவிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

அவர்களை அனைவரையும் நேற்று முதல்  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹாரிசன் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடிமீது நம்பிக்கை இல்லை என்று டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று காலை வெற்றிவேல் பாதுகாப்புடன் கவர்னரை சந்தித்து கடிதம் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து தற்போது சென்னையில் இருக்கும் 19 எம்எல்ஏக்களும், எடப்பாடி அணிக்கு தாவி விடாமல் இருக்க, அவர்கள் அனைவரையும் புதுச்சேரிக்கு அழைத்துச்செல்ல இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் குதிரை பேரம் நடைபெறுவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. எடப்பாடிக்கு ஆதரவாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க டிடிவி தினகரன் தரப்பினர் மீண்டும் பண பேர விளையாட்டில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் உலா வருகின்றன.

கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் தனித்தனியே தினகரன் மற்றும் பழனி சாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். யாரை ஆதரித்தால் எதிர்காலம் வளமாக இருக்கும் என்று மூவரும் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இந்த முறை கூவத்தூர் குதிரை பேரம் நடைபெற மத்திய மோடி அரசு அனுமதிக்காது என்றும், எடப்பாடிக்கு ஆதரவாக மத்திய அரசின்  வருமானவரித்துறை, சிபிஐ போன்றவை மீண்டும் களத்தில் இறக்கப்படும் என்றும் தலைநகர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.