காங்கிரஸ் ஆதரவுடன் காஷ்மீரில் மீண்டும் மெகபூபா ஆட்சி? பாஜக அதிர்ச்சி

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் பாஜக ஆதரவு விலக்கிக் கொண்டதால், பதவியை ராஜினாமா செய்த மெகபூபா தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறார். இது தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களுடன் இன்று மாலை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.

ஜம்மு காஷ்மீரில் 2015ம்ஆண்டு  நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி – பாஜக கூட்டணி ஏற்பட்டு, கூட்டணி  ஆட்சி நடை பெற்று வந்தது.

நாளடைவில் இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பாஜக தனது உறவை முறித்துக்கொண்டது. இதையடுத்து முதல்வர்  மெகபூபா முப்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சி கடந்த ஜூன் மாதம்  நடைமுறைப்படுத்தப்பட்டது.

கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக காஷ்மீரில் கவர்னர் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பாஜகவை தவிர்த்து மற்ற கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தன.

இதைத்தொடர்ந்து இரு துருவங்களாக இருந்து வந்த மெகபூபாவின் மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி ஆகியவற்றுடன் காங்கிரஸ் கட்சி பேசி வந்தது. தற்போது 3 கட்சியினரும் இணைந்து  மெகா கூட்டணி அமைத்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து,  கட்சி தலைவர்களும்  இன்று மாலை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர முடிவு செய்துள்ளனர். இந்த ஆட்சிக்கு  பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய கூட்டணி வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இன்று மாலை  அல்லது நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீர் மாநிலத்தில் 87 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. காங்கிரசுக்கு 12, தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 15 எம்எல்ஏக்கள் பலமுள்ளது. இந்த 3 கட்சிகளும் சேர்ந்து மொத்த பலமம் 55 எம்எல்ஏக்கள். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 44 உறுப்பினர்கள்  மட்டுமே தேவை என்ற நிலையில் மெகபூபா மீண்டும் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறார்.

பாஜகவுக்கு எதிராக அனைத்துக்கட்சிகளும் ஒன்றிணைந்து களமிறங்கி இருப்பது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மெகபூபா மீண்டும் ஆட்சி அமைக்க கவர்னர் உடன்படுவாரா? என்பது விரைவில் தெரிய வரும்.