“ஸ்கிரிப்ட்டுக்கு நிறைய நேரம் ஒதுக்குங்கள்” ; ‘தனயன்’ விழாவில் ஜெய் ஆகாஷுக்கு பாக்யராஜ் அட்வைஸ்..! 

ஜெய்பாலாஜி மூவி மேக்கர்ஸ் வழங்க ஜெய் ஆகாஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘தனயன்’. இந்தப்படத்தில் கதாநாயகனாக இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்தப்படத்தைN.J.சதீஷ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த சதீஷ் வேறு யாருமல்ல.. சாட்சாத் ஜெய் ஆகாஷே தான். ஆம். தனது சொந்தப்பெயரில் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் ஜெய் ஆகாஷ்.

கதாநாயகிகளாக ஆர்த்தி சுரேஷ், கவிதா சேட்டர்ஜி, குஷி முகர்ஜி ஆகியோருடன் சாம்ஸ், பவர்ஸ்டார், தினேஷ் மேட்னே, இந்து, கீர்த்தனா, திலகவதி, வேணி, கானா பிரபா, சித்திரம் பாட்ஷா மற்றும் வில்லன் வேடத்தில் அமீத் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். மிஸ் மும்பை ஏஞ்சல் சிங் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

U.K.முரளி இசையமைத்துள்ள இந்தப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.. சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் கே.பாக்யராஜ், நடிகர் பானுசந்தர் மற்றும் இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்..பாடல் குறுந்தகடை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட , நடிகர் பானுசந்தர் மற்றும் இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர் .

விழாவில் ஜெய் ஆகாஷ் பேசியதாவது, “தெலுங்கில் வெற்றிகரமான நடிகனாக உலாவரும் எனக்கு இன்னும் என தமிழ்சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்கமுடியவில்லையே என்கிற வருத்தம் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வருத்தத்தை போக்கும் படமாக இந்த ‘தனயன்’ படம் இருக்கும். இந்தப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளேன்.. வாலி படத்தில் எப்படி இரண்டு வேறுபட்ட அஜித்களை பார்த்தீர்களோ அதேபோல இந்தப்படம் எனது கேரியரில் முக்கியமானதாக இருக்கும்.

டிச-19ல் இருந்து எனக்கு நல்ல நேரம் தொடங்குது அதற்கான அச்சாரம் தான் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா. இதை தொடர்ந்து, சென்னை டூ பாங்காங் மற்றும் ஆமா நான் பொறுக்கிதான் ஆகிய படங்களில் நடித்துவருகிறேன்.. ‘தனயன்’ படத்தை தொடர்ந்து அந்தப்படங்களும் வெளியாகும்போது தமிழ் சினிமாவில் எனக்கான இடம் நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார் ஜெய் ஆகாஷ்.

நடிகர் பானுசந்தர் வாழ்த்தி பேசியபோது, “நானும் ஜெய் ஆகாஷும் தெலுங்கில் நிறைய படங்களில் சேர்ந்து பணிபுரிந்துள்ளோம். அவருடைய டைரக்சனில் ஜென்ம ஜென்மலா பந்தம் என்கிற படத்தில் நானும் சுமனும் சேர்ந்து நடித்தோம்.. ஸ்பாட்டிற்கு வந்தபின் தான் ஜெய் ஆகாஷ் வசனம் எழுதுவார்.. அந்த அளவுக்கு திறமையானவர்.. ஒரு படம் மாஸாக எப்படி இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். அந்தவகையில் இது வித்தியாசமான ஆக்சன் மசாலா படமாக இருக்கும் என்பது ட்ரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது” என பாராட்டினார்.

இயக்குனர் கே.பாக்யராஜ் வாழ்த்தி பேசியபோது ஜெய் ஆகாஷ் குறிப்பிட்ட அந்த ‘நல்ல நேரம்’ பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டார். “நல்ல நேரம் பற்றி ஜெய் ஆகாஷ் பேசினார். அது உண்மை தான். அஞ்சு வருஷமா ஆர்,கே.நகர்ல இருந்தவனுக்கு திடீர்னு இடைத்தேர்தல் வரும்னு தெரியாம வேற இடத்துக்கு போறான்னா அதுக்கும் நேரம் தான் காரணம். இப்பத்தான் அஞ்சு மாசத்துக்கு முன்னாடி ஆர்.கே.நகருக்கு குடிவந்தவன் இந்த சீசன்ல லம்ப்பா ஒரு அள்ளு அள்ளுறான்னா அதுக்கும் நேரம் தான் காரணம். அப்படி ஜெய் ஆகாஷ் இங்க இருந்து தெலுங்குல போய் ஹிட் படங்களா கொடுக்கிறதுக்கும், இங்க இன்னும் ஒரு நல்ல இடத்தை பிடிக்க முடியலையேன்னு வருத்தப்படுறதுக்கும் அந்த நேரம் தான் காரணம்.

நடிகர் விக்ரம் நடித்த சேது படத்தை ரிலீசிற்கு முன் பார்ப்பதற்கு அழைத்தார்கள்.. அப்போது என்னுடன் ஒரு பெண்மணி ஆவலாய் அமர்ந்து படம் பார்த்தார். படம் முடிந்ததும் சார், இந்தப்படம் எப்படி இருந்தது என கேட்டார். அதற்கு நான் விக்ரமிற்கு இது முதல் படமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படி இல்லாம விக்ரமுக்கு பதிலா வேற யாராவது நடிச்சிருந்தாலும் கூட நல்லாத்தான் இருக்கும்னு சொன்னேன்.. உடனே அவங்க போங்க சார்.. விக்ரமுக்கு மட்டும் தான் இந்த கேரக்டர் செட்டாகும்னு சொல்லிட்டு போனாங்க.. அப்புறம் தான் தெரியவந்தது.. அவங்க விக்ரமோட மனைவின்னு.. என் நேரம் அவங்ககிட்டயே அப்படி சொல்ல வச்சிருக்கு.

எங்க குருநாதர் பாரதிராஜாவின் முதல் படமே பல சவால்களை சந்தித்துதான் ரிலீஸானது. கடின உழைப்புடன் நமது நேரமும் நன்றாக இருந்தால் வெற்றி நம்மை தேடிவந்தே தீரும். நடிகர் விக்ரம் அப்படி பல வருட போராட்டத்தில் தனக்கு ஏற்பட்ட பல தோல்விகள், தடைகளை தாண்டித்தான், இன்று மிகப்பெரிய ஹீரோவாக வலம்வருகிறார். அதேபோல ஜெய் ஆகாஷுக்கும் அவரது நேர்மையான உழைப்புக்கான பலன் விரைவில் கிடைத்தே தீரும்”

ஜெய் ஆகாஷ் ஒவ்வொரு படத்தின் ஸ்க்ரிப்ட்டிற்கும் நல்ல கவனமும் நிறைய நேரமும் எடுத்துக்கொள்ளவேண்டும். ஸ்கிரிப்ட் தான் உங்களை பேசவைக்கும். ஸ்பாட்டிற்கு வந்தபின் தான் ஜெய் ஆகாஷ் வசனம் எழுதுவார் என பானுசந்தர் சொன்னார்.. நானும் அதேபோலத்தான். அந்தளவுக்கு மனதிற்குள் ஸ்கிரிப்ட் ஓடிக்கொண்டிருந்தால் மட்டுமே அது சாத்தியம். அப்படி திரைக்கதை விஷயத்தில் உங்களுக்கு எந்த உதவி வேண்டுமென்றாலும் நீங்கள் தாராளமாக என்னை அணுகலாம். நான் உங்களுக்கு உதவ காத்திருக்கிறேன்” என வாழ்த்தினார்.

சிறப்பு விருந்தினராக வந்திருந்த இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார் பேசும்போது, “இன்னைக்கு தமிழ் சினிமா, குறிப்பா சின்ன பட்ஜெட் படங்கள் தடுமாறிக்கொண்டு இருக்கிறது. அந்தப்படங்களுக்கு மார்க்கெட் இல்ல… அப்படிப்பட்ட படங்களுக்கு மார்க்கெட் உருவாகும்னு நம்பிக்கை வருதுன்னா அந்த  நம்பிக்கை நட்சத்திரமா ஜெய் ஆகாஷ் தான் தெரியுறார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கூட ஆரம்பத்துல சில சின்ன படங்கள், தோல்விப்படங்கள்ல நடிச்சுட்டு நாற்பது வயதுக்கு மேல தான் ஹிட் படங்களா கொடுக்க ஆரம்பிச்சாரு. அப்படி எம்.ஜி.ஆருக்கு ஒரு தாயைக்காத்த தனயன் போல, ஜெய் ஆகாஷுக்கு இந்தப்படம் ஊரை காத்த தனயன் ஆக அமையும் என நம்புகிறேன்” என கூறினார்.

 

நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

நடிகர்கள் ; ஜெய் ஆகாஷ், ஆர்த்தி சுரேஷ், கவிதா சேட்டர்ஜி, குஷி முகர்ஜி, சாம்ஸ், பவர்ஸ்டார், தினேஷ் மேட்னே, இந்து, கீர்த்தனா, திலகவதி, வேணி, கானா பிரபா, சித்திரம் பாட்ஷா, அமீத், மும்பை ஏஞ்சல் சிங்

நடனம் ; ரமேஷ் ரெட்டி, ரமேஷ் கமல்

ஆக்சன் ; பாக்ஸி

வசனம் M.தியாகராஜ்

படத்தொகுப்பு ; பிரேம்

ஒளிப்பதிவு ; தேவராஜ்

இசை ; U.K.முரளி

கதை, திரைக்கதை, இயக்கம் ; N.J.சதீஷ் (ஜெய் ஆகாஷ்)

இணை தயாரிப்பு ; R.ராஜன், M.கருப்பையா

தயாரிப்பு ; ஜெய் ஆகாஷ்  – ஜெய்பாலாஜி மூவி மேக்கர்ஸ்

மக்கள் தொடர்பு ; செல்வரகு