தனவேல் எம்எல்ஏ தகுதி நீக்கம் எதிரொலி: பாகூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு

--

புதுச்சேரி: தனவேல் எம்எல்ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து  பாகூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி பாகூர் தொகுதி எம்எல்ஏ தனவேல் காங்கிரசை சேர்ந்தவர். கட்சித் தலைமைக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளிப்பது என செயல்பட்டதால் அதிருப்தி எம்எல்ஏவாக கருதப்பட்டு வந்தார்.

இந் நிலையில் தனவேல் அவரது பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் சிவகொழுந்து நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்தார். புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ அரசுக்கு எதிராக செயல்பட்டதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இன்று சபாநாயகர் சிவகொழுந்து புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, தனவேல் தகுதி நீக்கம் தொடர்பான கடிதம் தேர்தல் துறைக்கு அனுப்பப்பட்டதால் பாகூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.