ஹாசினி கொலை குற்றவாளிக்கு பெயில்: பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!

சென்னை,

மிழகத்தையே உலுக்கிய  சென்னை முகலிவாக்கம்  7வயது குழந்தையான ஹாசினி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு, அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர குற்ற வாளி ஜஸ்வந்துக்கு சென்னை ஐகோர்ட்டு பெயில் வழங்கி உள்ளது.

இது பொதுமக்களிடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு சிறுமியின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 8ந்தேதி முகலிவாக்கம், மாதாநகரைச் சேர்ந்த 7 வயதே ஆன ஹாசினி என்ற சிறுமி மாயமானார். இரண்டாவது படித்து வந்த மாணவி தான் வசித்து வந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் அங்குள்ள சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடியபோது திடீரென்று காணாமல் போனார். பின்னர் அவரது உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இதுதொடர்பான விசாலரணையில்  அந்த குடியிருப்பில் வசித்து வந்த சாப்ட்வேர் இஞ்சினியர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர்மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.

இந்நிலையில், தற்போது  அவருக்கு சென்னை ஐகோர்ட்டு  பெயில் வழங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற குற்றங்களை செய்த ஒருவருக்கு ஐகோர்ட்டு பெயில் கொடுத்தது எப்படி என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட சிறுமி ஹாசினியின் தந்தை இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுபோன்ற கொடூர குற்றவாளிகள் வெளியே வந்தால், மேலும் இதுபோல குற்றங்களில் ஈடுபட மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாரம் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும்,  குற்றவாளியின் தந்தை தன் மகனை வெளியில் கொண்டு வருவேன் என்று என்னிடம் சவால்விட்டார். அதுபோலவே தற்போது அவனை வெளியே கொண்டு வந்துள்ளார். இதன் காரணமாக  அவன்  மேலும் பலரை கொல்லவும் தயங்கமாட்டான் என்று குற்றம் சாட்டினார்.

மேலும்,. பாலியல் வன்கொடுமை செய்தவர்களையும் கொலை செய்தவர்களையும் நீதிமன்றங்கள் வெளியில் விடகூடாது என்றும், தனது மகளின் மரண அதிர்ச்சியில் இருந்து எனது மனைவி இன்னும்  மீண்டு வரவில்லை என்றும் கூறினார்.

இதற்கிடையில், ஹாசினி வழக்கில் அரசு உரிய மேல் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.