பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்தில் நடிகர்களை நோக்கி ஒரு குண்டை வீசினார். அதாவது, “ரஜினி நடித்த காபாலி முதல், சமீபத்தில் வெளியான சூர்யாவின் சிங்கம் வரை விநியோகஸ்தர்களுக்கு நட்டத்தையே அளித்தன” என்று பட்டியலிட்டார்.

மேலும், “சி3 படத்தின் நட்டத்தால் விநியோகஸ்தர்கள் காரை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால், அந்த படம் வெற்றி என்று இயக்குநர் ஹரிக்கு காரை பரிசளிக்கிறார் சூர்யா” என்றும் போட்டுத்தாக்கினார் சுப்பிரமணியம்.

அது மட்டுமல்ல… “விஜய் நடித்து சமீபத்தில் வெளியான பைரவா படமும் தோல்விப்படம்தான்.  இந்தப் படத்தின் கோவை ஏரியாவை வாங்கிய எனக்கு 1.64 கோடி ரூபாய் நட்டம். நான் என்னுடைய தங்கச் செயினை நட்டத்துக்காக விற்கும்போது, பைரவா வெற்றி என்று தங்கச்சங்கிலி பரிசளிக்கிறார்கள்” என்றும் கூறி அதிரவைத்திருந்தார்.

வழக்கம்போல மற்ற ஹீரோக்கள் வாய்மூடி மவுனித்திருந்தார்கள். பைரவா படம் நான்கே நாளில் நூறு கோடி ரூபாய் வசூலித்தது என்று அறிவித்த அந்தப்பட தயாரிப்பாளர் தரப்பும் மூச்சுவிடவில்லை.

ஆனால், விஜய்யால் அப்படி இருக்க முடியவில்லை. படத்தில் பங்குபெற்ற கலைஞர்களுக்கு தங்க சங்கிலி பரிசளித்தது குறித்து, தனது பி.ஆர்.ஓ. மூலம் ஒரு விளக்கம் அளித்திருக்கிறார்.

“படக் கலைஞர்களுக்கு, விஜய் செயின் பரிசளித்தது பைரவா படத்தின் வெற்றிக்காக அல்ல. பைரவா படத்தில் கடுமையாக உழைத்தவர்களுக்கு விஜய் தனிப்பட்டமுறையில் தெரிவித்த பாராட்டுதான்” என்பதுதான் அந்த விளக்கம்.

“ஆக…  பைரவா வெற்றிப்படம் இல்லை என்று விஜய் தரப்பே ஒப்புக்கொள்கிறது.. அதானே” என்று மடக்குகிறார்கள் விநியோகஸ்தர்கள்.

என்னங்ணா.. இப்படி சிக்கிட்டீங்களேண்ணா!