காதலர் தினம் கொண்டாட வேண்டாம் : இளைஞர்களுக்கு பஜ்ரங் தள் அறிவுரை

டில்லி

ந்த வருட காதலர் தினத்தன்று பஜ்ரங் தள் அமைப்பினர் ஒவ்வொரு பூங்கா மற்றும் பொது இடங்களுக்கு சென்று அங்குள்ள இளைஞர்களுக்கு காதலர் தினம் கொண்டாட வேண்டாம் என அறிவுரை வழங்க உள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் பிப்ரவர் 14 ஆம் தேதி உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இந்த கொண்டாட்டத்துக்கு பல அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக வட இந்தியாவில் பல இந்து அமைப்புக்கள் இந்த தினத்தன்று தனிமையில் சந்திக்கும் காதலர்களை அந்த இடத்திலேயே திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என மிரட்டி வருகின்றன.

இந்த வருடம் காதலர் தினம் நெருங்கி வரும் வேளையில் இந்து அமைப்பான பஜ்ரங் தள் இம்முறை யாரையும் மிரட்டவோ தண்டிக்கப் போவதோ இல்லை என அறிவித்துள்ளது. இது குறித்து பஜ்ரங் தள் தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சவுகான், “ காதலர் தினத்துக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்மந்தம்? அது நமது நாட்டுக்கு சொந்தமான கொண்டாட்டம் இல்லை.

எனவே எங்கள் அமைப்பின் தொண்டர்கள் அன்றைய தினம் பூங்கா மற்றும் பொது இடக்களில் கண்காணிப்பு செய்ய உள்ளனர். அங்கு வரும் இளைஞர்கள் மற்றும் இளைஞிகளிடம், இது தவறான பழக்கம் என அறிவுரை வழங்க உள்ளனர். மற்றும் பெற்றோர்களிடமும் தங்கள் குழந்தைகளுக்கு இந்த பழக்கம் வேண்டாம் என வலியுறுத்த கோரிக்கை அளிக்க உள்ளோம்.

நாங்கள் காதலுக்கு எதிரிகள் இல்லை. காதலர் தினம் என்ற பெயரில் வர்த்தகர்கள் பணம் சம்பாதிக்க நடத்தும் நமது கலாசாரத்துக்கு ஒத்து வராத கொண்டாட்டங்களுக்கு மட்டுமே எதிராக உள்ளோம். காதலர் தினம் கொண்டாடப்பட காரணமான வாலண்டைன் என்பவரை ரோம் அரசு அரச துரோகி என கூறி உள்ளதை மறக்கக்கூடாது” என தெரிவித்துள்ளார்.
.

Leave a Reply

Your email address will not be published.