ங்களூரு

புத்தாண்டுக் கொண்டாட்டங்களை தடை செய்ய வேண்டும் என பஜ்ரங் தள் அமைப்பு மங்களூரு காவல் துறை கமிஷனருக்கு மனு அளித்துள்ளது.

கர்நாடகாவின் மங்களூரு பகுதி கோவாவை ஒட்டி இருப்பதால்  அங்கு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.    அதை ஒட்டி இந்த வருடமும் பல விடுதிகளில் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெற உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.  இந்நிலையில்  தட்சின கன்னட பஜ்ரங் தள் தலைவர் சரன் மங்களூரு காவல் துறை கமிஷனர் சுரேஷை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில், “புத்தாண்டு என்ற பெயரில் அரைகுறை உடை நடனங்களுடன் மது அருந்தும் கொண்டாட்டம் நகரின் பல இடங்களில் நடபெற உள்ளது.   இவை எல்லாம் மேற்கத்திய கலாசாரங்களே ஆகும்.   ஏற்கனவே லவ் ஜிகாத் என்னும் பெயரில் பல அப்பாவி பெண்கள் ஏமாற்றப் படுகின்றனர்.   இந்தகைய கொண்டாட்டங்கள் லவ் ஜிகாத்துக்கு வழி வகுக்கும்.   இதனால் மேலும் பல அப்பாவிப் பெண்கள் நாசமாவார்கள்.

இந்த நிகழ்வை நடத்துபவர்கள் போதை மருந்து மற்றும் பெண்களைக் கடத்தும் கும்பலை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.   அதனால் தான் அனைத்து விடுதிகளிலும் ஆபாச நடனங்கள்,   மது விருந்துகள் ஆகியவைகளை நடத்துகின்றனர்.   எனவே இது போன்ற கொண்டாட்டங்களை தடை செய்ய வேண்டும்.   அனைத்து விடுதிகள், பார்,  மற்றும் பப் எல்லாமே  இரவு 11 மணிக்கு மூடப்பட வேண்டும்.   இந்த தடை மூலம் பெண்கள் தவறான பாதையில் செல்வதை தடுக்க முடியும்.” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட கமிஷனர், எந்த ஒரு சட்டவிரோதமான நடவடிக்கைகளும் நடக்காமல் இருக்க காவல்துறை  நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக உறுதி அளித்துள்ளார்.