சென்னை:

மிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு பொது சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பான 1998ம் ஆண்டைய வழக்கில்  3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவரது பதவி பறிபோனது.

இந்த நிலையில் பதவி இழந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் ஓசூர் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக அரசின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை  அமைச்சராக இருந்தவர் பாலகிருஷ்ணா ரெட்டி.  1998ம் ஆண்டைய வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் 10,500 ரூபாய் அபராதமும் விதிக்கப் பட்டு உள்ளது.  பதவியில் உள்ள  ஒருவருக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட் டாலே அவரது எம்எல்ஏ  பதவி மற்றும் அமைச்சர் பதவிகள் தானாகவே தகுதியிழந்து  விடும். இந்த நிலையில் அவரது தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே திருவாரூர், திருப்பரங்குன்றம் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் 18 தொகுதிகள் என 20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் தற்போது ஓசூர் தொகுதியும் காலி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் மொத்தம் 21 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கும், நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து இடைத்தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது.