கோவை:

யிருடன் உள்ளவர்களுக்கு பேனர் வைக்கக் கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து, பலூன்களில் படம் அச்சிட்டு புதுவிதமாக தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள ஆரம்பித்துள்ளனர் ஆளும்கட்சியினர்.

சமீத்தில் சென்னை உயர் நீதிமன்றம், உயிருடன் உள்ளவர்களுக்கு பேனர் வைக்கக்கூடாது என உத்தரவிட்டது. இதை மீறி சில இடங்களில் பேனர்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த நிலையில் தங்களை விளம்பரப் படுத்திக்கொள்ள ஆளுங்கட்சியினர் வேறு வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.

கோவையில் நகரின் மையப் பகுதியாக இருக்கும் காந்திபுரத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

நஞ்சப்பா சாலை பார்க்கேட் சந்திப்பிலிருந்து சத்தி சாலை ஆம்னி பேருந்து நிலையம் வரை 1756 மீட்டர் நீளத்துக்கு முதல் அடுக்கு மேம்பாலமும், 100 அடி சாலையிலிருந்து, சின்னசாமி சாலை ஆவாரம்பாளையம் சந்திப்பு வரை 1226 மீட்டருக்கு இரண்டாம் அடுக்கு மேம்பாலமும் கட்டப்பட்டு வருகிறது. ரூ.195கோடி செலவில் கட்டப்படும் இந்த இரண்டு பாலங்களால் நகரின் போக்குவரத்து பிரச்சினைகள் பெருமளவு குறையும் வாய்ப்புள்ளது.

இந்த பாலத்தின் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடந்துவருகின்றன.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்கும் விதமாக, நகரெங்கும் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. வரவேற்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதே நேரம் நீதிமன்ற உத்தரவால் ஆள் உயர பேனர்கள் வைக்க முடியவில்லை. இதனால் பெரிய பலூனில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஜெயலிலதா உள்ளிட்டோரின் படங்களை அச்சிட்டு பறக்கவிட்டிருக்கிறார்கள் ஆளுங்கட்சியினர்.