டில்லி,

மூங்கில் மரம் இனி மரம் கிடையாது என்ற புதிய மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய வனங்கள் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்தது.   அதன்படி,  இந்திய வனங்கள் சட்டத்தின் கீழ், மரங்களுக்கான வரையறையில் இருந்து மூங்கிலை நீக்குவதற்கான திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

டில்லி மேல்–சபையில் இம்மசோதாவை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி ஹர்‌ஷ வர்த்தன் தாக்கல் செய்தார்.

அதன் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய அவர்,  ‘‘இந்த நடவடிக்கையால், காடுகள் அல்லாத இடங்களில் மூங்கிலை வளர்ப்பதுடன், அதை வெட்டி மற்றொரு இடத்துக்கு அனுப்பலாம். இதன்மூலம், பழங்குடியினர், காடுகளை ஒட்டி வசிப்பவர்களின் வருவாய் அதிகரிக்கும்’’ என்று கூறினார்.

ஆனால், அவரது பதில் திருப்தி அளிக்கவில்லை என்று காங்கிரஸ், சமாஜ்வாடி, பிஜு ஜனதாதளம் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதனால், இரு அவைகளிலும் இம்மசோதா நிறை வேறி விட்டது. இருப்பினும், வனப்பகுதி நிலங்களில் மூங்கிலானது மரமாகவே கருதப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒரு மூங்கில் தனது வாழ்நாளில் 450 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். எனவே,மூங்கில் சுற்றுச்சூழலை பாதுகாக்க சிறந்த மரம் என்று கருதப்படுகிறது.