தனது கோல்ப் கிளப்புகள் உள்ள நாடுகளுக்கு தடை விதிக்காத டிரம்ப்… சர்ச்சை…

வாஷிங்டன்:

கொரோனா தொற்று காரணமாக 26 ஐரோப்பிய நாடுகளுக்குத் தடை விதித்துள்ள அமெரிக்க அதிபர்  டொனால்டு டிரம்ப், தனக்கு சொந்தமாக கோல்ஃப் விளையாடும் மைதானங்கள் அமைந்துள்ள சில நாடுகளுக்கு தடை விதிப்பதில் இருந்து விலக்கு அளித்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 26 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தோர் அமெரிக்கா வருவதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று முன்தினம் தடை விதித்துள்ளார்.

 

இந்தத் தடையில்,  அவருக்குச் சொந்தமான கோல்ஃப் கிளப்புகள் அமைந்துள்ள சில நாடுகளுக்கு தடைவிதிக்காதது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இத்தடை உத்தரவு முப்பது நாட்கள் வரை நடைமுறையில்  இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இதில் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு மட்டும் விலக்கு அளித்துள்ளார். அந்த நான்கு நாடுகளில் டிரம்ப்பின் கோல்ஃப் கிளப்புகள் அமைந்துள்ளன. அவை தற்போதைய சூழலில் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதால் அவைகளுக்கு மட்டும் விதிகள் தளர்த்தப் பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய யூனியனின் பல நாடுகள் எல்லைக் கட்டுப்பாடுகள் இன்றி பயணிக்கும் தகுதி படைத்தவை. அவைகளுக்கு இவ்வாறு தடை விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபரின் தடை குறித்து ஐரோப்பிய கமிஷன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் ”கொரோனா வைரஸ் உலகளவில் பரவிவரும் நோயாகும். அந்நோய் குறிப்பிட்ட கண்டத்திற்கு மட்டும் உரியதல்ல. இது யாரையும் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட ஒருதலை பட்சமான முடிவு எனக் கண்டித்துள்ளனர்.

டொனால்ட் டிரம்ப் இதற்கானத் தடை உத்தரவை அறிவிக்கையில், ஐரோப்பிய நாடுகள் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் பெரும் தோல்வியை அடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.