சிறப்புக்கட்டுரை: ராஜரிஷி
சென்னையில் அன்று பேய்மழை பெய்து கொண்டு இருந்தது. நான் குடியிருந்த வீட்டின் தரைப்பகுதியில் இருந்து ஊற்றுப்போல் நீர் வெளியேறி, திகிலைக் கூட்டிக் கொண்டு இருந்தது. எனது இரண்டரை வயது கைக்குழந்தையுடன் கட்டிலில் அடைக்கலமாகி இருந்தேன். என் மனைவி வெள்ள நீரை வெளியேற்றுவதில் தீவிரமாயிருந்தாள். பலத்த மழையிலும் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என்பது ஒரு ஒரு ஆறுதல்.
மழை வெள்ள பாதிப்பை தாண்டி நான் டிவியில் மூழ்கி இருந்தேன். மும்பை ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல் என பயங்கரவாதிகளின் வெறியாட்டமும், பாதுகாப்புப் படையும், ராணுவமும் அவர்களை எதிர்கொள்ள எடுத்த நடவடிக்கைகளையும் வட இந்திய சேனல்கள், ‘லைவ்’ செய்த வண்ணம் இருந்தன. ஒரு பகுதியில் இருந்து, இன்னொரு பகுதிக்கு தப்பியோடும் தீவிரவாதி வட்டம் போட்டு காட்டப்பட்டார். ஹோட்டலில் இருந்தும், அருகில் உள்ள வீடுகளிலும் சிக்கிக் கொண்டவர்கள் குறித்த தகவலும், அவர்களை மீட்கும் பணியையும், கூடுதல் படைகள் குவிக்கப்பட்ட காட்சிகள், நூல் ஏணி மூலம் மீட்பு, குண்டுகள் முழங்கும் சத்தம், தீப்பிடித்து எரியும் காட்சிகள் என மும்பை காட்சிகள் நேரலையாக அல்ல நேரடியாக பார்ப்பது போல இருந்தது.
sakshipost%2f2016-11%2f21939a35-4575-43ab-a54f-8c6bc46f532e%2fndtv-indiaஇந்த மீடியாக்கள் இல்லாவிட்டால், அடுத்தநாள் நாளிதழிலோ, ஆல் இந்தியா ரேடியோ செய்தியிலோ படித்தோ, கேட்டோதான் தெரிந்து கொண்டு இருக்க முடியும்’ என்ற எண்ணத்தை என் மனைவியிடம் வாய் விட்டு சொன்னேன். அப்போது நான் ஒரு செய்தியை அறிய விரும்பும் பார்வையாளனாகவே இருந்தேன்
ஆனால், அடுத்தடுத்த நாட்களில் இந்த நேரலை விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. பயங்கரவாத செயல்களை மேற்கொண்டவர்களுக்கு, அதன் பின்னணியில் இருந்தவர்கள்  நேரலைக் காட்சிகளை சொல்லி உஷார் படுத்திய, உத்தரவிட்ட அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாயின. நேரலை ஒளிபரப்பைத் தடுக்க டெல்லி அளவில் அப்போதே சில முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அது ஊடக சுதந்திரம் என்ற ‘தடித்த வார்த்தை’யால் முழுமை பெற முடியவில்லை
ஊடகங்களுக்கு கட்டுப்பாடு தேவை என்ற கருத்து வலுப்பட்டது இந்த சம்பவம் காரணமாகத்தான்.
இந்த சம்பவத்திற்குப் பின் மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத்துறை ஊடகங்கள் பைன்பற்றப்பற்ற வேண்டிய விதிமுறைகளை வகுத்தது. அதனை அனைத்து செய்தி ஊடகங்களுக்கும் அனுப்பி அமைச்சகம், இதனை பின்பற்ற வேண்டும் என செய்தி சேனல்களுக்கு அறிவுறுத்தியது.
இப்போது அத்தகைய விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் என்.டி.டி.வி. இந்தி சேனல் சிக்கியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் மற்றும் அது முறியடிக்கப்பட்ட விதத்தை மற்ற செய்தி சேனல்களைப் போலவே என்.டி.டி.வியும் ஒளிபரப்பியது.
இதில் எங்கே விதிமீறல் வந்தது?
செய்தி சேனல்களை தொடர்ந்து பார்த்து வருபவர்கள், நேரலையில் நடக்கும் ‘கூத்து’க்களை கட்டாயம் பார்த்து இருப்பர். பொதுவாக நேரலை செய்தியில் களத்தில் இருக்கும் நிருபர், சம்பந்தப்பட்ட பகுதியையோ, அதே துறை செய்திகளை தொடர்ந்து அளிப்பவராக இருந்தால், நேரலை கொஞ்ச நேரம் தாக்குப்பிடிக்கும். அது இல்லாமல் திடீரென ஒரு நிருபர் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டு இருந்தால்… சொன்ன விஷயத்தையே, வேறு வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டியும், செய்தி வாசிக்கும் அரங்கில் இருப்பவர் கேட்ட விஷயத்தையே, வேறு வேறு வார்த்தையில் கேட்கும் நிலையும் ஏற்படும். இந்த இழுவையை சமாளிக்க அலுவலகத்தில் இருக்கும் மூத்த செய்தியாளர் சப்பைக்கட்டு கட்டி நிலைமையை சமாளிப்பார்.

மும்பை தாக்குதல்
மும்பை தாக்குதல்

பதன்கோட் விமானபடைதளத்தில் களத்தில் இருந்த நிருபர் துறை, இடம் சார்ந்த விபரங்களை தெளிவாக தெரிந்து வைத்திருந்ததால், அங்குள்ள போர் விமானங்கள், வெடிமருந்துகள் இருக்கும் இடம், பயங்கரவாதிகள் பதுங்கிய இடத்தில் இருந்து வீரர்களின் குடியிருப்புகள், வீரர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளி உள்ள தொலைவு போன்ற தகவல்களை சற்று விரிவாகச் சொல்லி, ‘தெளிவான’ பதிவை செய்திருந்தார்.
எடிட் செய்யாமல் வெளியாகும் ‘நேரலை’ செய்திகள், விவாதங்கள் பல நேரங்களில் தவறான பாதையில் செல்கின்றன என்பதற்கு பதன்கோட் விமானதள செய்தி ஒரு உதாரணமாக அமைந்து விட்டது. ஏற்கனவே மும்பை பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்திற்கு பின் சேனல்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளை அனைத்து ஊழியர்களுக்கும் சென்றடைந்துள்ளதா என்ற கேள்வியும் இந்த நேரத்தில் எழுகிறது. ஒருவேளை அவை முறையாக நிருபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தால், இந்த வர்ணணை நீண்டிருக்கமால் இருந்து இருக்கலாம்.
பதன்கோட் சம்பவத்தில் என்.டி.டி.வியின் நேரலை ஒளிபரப்பு குறித்து விவாதித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், இது குறித்து விளக்கம் அளிக்கும்படி அந்த செய்தி சேனலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ‘மற்ற சேனல்கள் மற்றும் இணையதளம் போன்றவற்றில் ஏற்கனவே வெளியிடப்பட்ட தகவல்களை மட்டுமே ஒளிபரப்பினோம்’ என பதில் அளித்தது.
மேலும், ‘நவம்பர் 2 வெளியிடப்பட்டிருக்கும் கமிட்டியின் ஆணையில், ஜனவரி 4, 2016 அன்று 12:25 மற்றும் 12:31 மணிகளுக்கு ஒளிபரப்பப்பட்ட செய்திகளுக்காகவே தடைவிதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேற்சொல்லப்படும் ஒளிபரப்பில், தளத்தில் இருந்த நிருபர் ஸ்டூடியோவில் இருந்த தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் குறித்து முக்கியமான தகவல்களை தெரிவித்திருக்கிறார்’ என்றும் என்.டி.டி.வி தெரிவித்துள்ளது.
6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது மட்டுமல்லாது, 7 பாதுகாப்புப்படை வீரர்கள் வீர மரணம் அடைய காரணமாய் அமைந்த இந்த சம்பவத்தில் குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கிறோம் என்ற எண்ணத்தோடு இந்த பதில் பதிவு செய்யப்படவில்லை என்றே நான் உணர்கிறேன்.
செய்தி ஒலிபரப்புத்துறை அனுப்பிய நோட்டீஸில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தால் இந்த நடவடிக்கை ஏற்பட்டிருக்காது என்றே கருதுகிறேன். மும்பை தாக்குதல் சம்பவத்தில் நேரலையில் ஒளிபரப்பான செய்தி ஏற்படுத்திய தாக்கம் குறித்த அனுபவம் இருந்தும், இது தொடர்பாக விதிமுறைகள் வகுக்கப்பட்டு இருந்தும், அவற்றை பின்பற்றவில்லை என்ற குற்ற உணர்வு என்.டி.டி.விக்கு ஏற்பட்டு இருக்க வேண்டும். அதன் விளைவு பதில் அறிக்கையில் வார்த்தைகளாக வெளியிடப்பட்டு இருக்குமானால், இப்போது இந்த விவகாரம் பெரிதாக்கப்பட்டு இருக்காது.
இந்த நிலையிலும், மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு துறையின் அறிக்கை மிகவும் துல்லியமாக தனது நடவடிக்கையை பதிவு செய்துள்ளது.
பதன்கோட் விமானதளத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கு முக்கிய தகவல்களை அளிக்கும் வகையில் செய்தி ஒளிபரப்பு இருந்தது மிகவும் கவலை அளிக்கிறது. இது போன்ற தகவல்களை பயங்கரவாதிகளை இயக்கியவர்கள் எளிதாக பெற்றுக் கொண்டு ராணுவத்தினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்க முடியும். இதில் விதிமுறை மீறப்பட்டிருப்பது வெளிப்படையாக தெரிகிறது.
பதான்கோட் தாக்குதல்
பதான்கோட் தாக்குதல்

இது போன்ற விதிமுறை மீறலுக்கு, செய்தி சேனலில் ஒளிபரப்புக்கு 30 நாட்கள் தடை விதிக்க முடியும். இந்த புதிய விதிமுறை கடந்தாண்டு சேர்க்கப்பட்டதாலும், முதல் முறையாக இது போன்ற சம்பவத்துக்கு நடவடிக்கை எடுப்பதாலும், அடையாள அபராதமாக  ஒருநாள் ஒளிபரப்பு தடை செய்யப்படுகிறது. எனவே நவம்பர் 9ம்தேதி  00:01 மணி முதல், நவம்பர் 10ம்தேதி  00:01 மணி வரை இந்தியா முழுக்க எந்த தளத்தின் வழியாகவும் என்.டி.டி.வியை ஒளிபரப்போ, மறு-ஒளிபரப்போ செய்வதற்கு தடைவிதித்து’ உத்தரவிடப்பட்டுள்ளது.
இது போன்ற உத்தரவு இதற்கு முன் வெளியிடப்பட்டதில்லை. தனிப்பட்ட முறையில் மத்திய அரசுக்கும், என்.டி.டி.விக்கும் எந்த மோதலும் இருந்ததாக தெரியவராத நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து, ‘கருத்து சுதந்திரம் பறிப்பு’ ‘மீண்டும் எமர்ஜென்சி’ என்று முழங்குவது அரசியலுக்கு வேண்டுமானால் பயன்படலாம். ஆனால், அவற்றில் உண்மை இல்லை.
இந்த இடத்தில் ஊடக அரசியல் குறித்து, ஆசியா ஊடகவியல் கல்லூரி இயக்குநர் சசிகுமார், விருதுநகரில் பங்கேற்ற ஒரு நிகழ்வில் பேசியதை (தமிழாக்கம்: அ.குமரேசன்) குறிப்பிட வேண்டியுள்ளது. அது:
ஊடகங்களின் சட்டப்பூர்வ உரிமைகள் என்பவை விளக்கத்தின் அடிப்படையில் அமைந்தவையேயன்றி, சட்டப்படி வரையறுக்கப்பட்டவை அல்ல. இந்திய அரசமைப்பு சாசனத்தில் எங்கேயும் ஊடகங்களின் உரிமைகள் இவை என திட்டவட்டமாக சொல்லப்படவில்லை. அமெரிக்காவில் அப்படிப்பட்ட சட்டம் இருக்கிறது. அமெரிக்க அரசமைப்பு சாசனத்தில் நாடாளுமன்றம் ஒருபோதும் ஊடகங்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் சட்டம் எதையும் நிறைவேற்றாது என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய அரசமைப்பு சாசனத்தில் அவ்வாறு நேரடியாக இல்லை. அதன் அடிப்படை உரிமைகள் பிரிவில், 19 – 1 ஏ, ஜி ஆகிய உட்பிரிவுகளில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என கூறப்பட்டுள்ளது. அந்த ஒரு வரியை வைத்துக்கொண்டு பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில்தான் ஊடகச் சுதந்திரம் விளக்கப்படுகிறது. இந்திய குடிமக்கள் எந்த ஒரு தொழிலிலும் ஈடுபடுவதற்கு, குறிப்பிட்ட கட்டுப்பாடுகளோடு சுதந்திரம் அளிக்கும் பிரிவுகளில் ஒன்றாகவே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும் இருக்கிறது.
அரசமைப்பு சாசனத்தில் குறிப்பாக வரையறுக்கப்படாத ஒரு சுதந்திரத்தை ஊடகங்கள் அனுபவித்துக் கொண்டிருப்பது எப்படி?  இந்திய மக்கள் வழங்கிய சுதந்திரம் அது. ஊடகங்களுக்கு அப்படி ஒரு அறம் சார்ந்த உயர்ந்த இடத்தை வழங்கியவர்கள் நாம்தான். சுதந்திரமான ஊடகம்தான் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும், சுதந்திரமான ஊடகம்தான் ஜனநாயகத்தை மேம்படுத்தும், சுதந்திரமான ஊடகம்தான் ஜனநாயகத்தின் ரத்தமும் உயிர்த்துடிப்புமாக இருக்க முடியும் என்ற நம்பிக்கையில் நாம் அந்த உயர்ந்த இடத்தை ஊடகங்களுக்கு வழங்கியிருக்கிறோம்.
ஆனால் ஊடகங்கள் வெறும் லாப வேட்டை வர்த்தக நிறுவனங்களாக, விற்பனைச் சரக்கு உற்பத்திக் கூடங்களாக மாறியிருக்கிறபோது, இப்படிப்பட்ட உயர்ந்த இடத்தை வழங்கியது சரிதானா என்று நாம் கேட்டாக வேண்டியிருக்கிறது.”  -இப்படி கூறியிருக்கிறார் திரு. சசிகுமார்.
அவர் கேட்டதையே நானும் கேட்க விரும்புகிறேன்.
ஊடகங்கள் வெறும் லாப வேட்டை வர்த்தக நிறுவனங்களாக, விற்பனைச் சரக்கு உற்பத்திக் கூடங்களாக மாறியிருக்கிறபோது, இப்படிப்பட்ட உயர்ந்த இடத்தை வழங்கியது சரிதானா?
அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட சம்பவத்தில், அந்நாட்டு ஊடகங்கள் எப்படி நடந்து கொண்டன என்பதை அவர்களை காப்பியடிக்கும் இந்திய ஊடகங்கள் உணர வேண்டும்.
அரசியல் தலைவர்கள், ஊடக சங்கங்களின் கருத்துக்களையெல்லாம் ஓரமாய் மூட்டை கட்டிவைத்து விட்டு, ஊடகத்தின் பார்வையாளர்களாக இருந்து அதற்கு உயிர்கொடுக்கும் பொதுமக்கள் முன் பதன்கோட் விவகாரத்தை முன் வைத்து பாருங்கள்.
கிழிபடுவது யாரின் முகமூடி என்று அப்போது தெரியவரும்.