புதுச்சேரியில் பேனர் வைக்க தடை: முதல்வர் நாராயணசாமி அதிரடி உத்தரவு

புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலத்தில் பேனர்கள் வைக்கத் தடை விதிக்கப்படுவதாக முதல்வர்  நாராயணசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ அதிமுகவினர் வைத்த பேனர் காரணமாக, சாலையில் விழுந்து பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், புதுவையில் பேனர் வைக்க தடை விதிக்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தை போலவே புதுவையிலும் பேனர் கலாச்சாரம் இருக்கிறது. இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க புதுவையில் பேனர் வைப்பதற்கு தடை விதிப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி,  தமிழகத்தில் இளம்பெண் ஒருவர் சாலை யோரத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் லாரியில் சிக்கி இறந்துள்ளார். இது அதிர்ச்சி அளிக்கிறது. இதன் காரணமாக புதுவையிலும்,  இதுபோன்ற பேனர்கள் வைப்பது தவிர்க்கப்பட வேண்டும். புதுவை அழகாக இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

இதனால் அனுமதியின்றி அரசியல் கட்சியினரோ, தனி நபர்களோ பேனர் அமைக்கக்கூடாது. பேனர் வைப்பது விதிமீறிய செயல். பேனர் வைப்பவர்கள் மீது அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பேனர்கள் அமைப்பதால் போக்குவரத்தில் பல அசம்பாவித சம்பங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் பேனர்கள் அமைப்பதை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேனர்கள், கட்-அவுட்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும். பேனர், கட்-அவுட் அகற்றுவதற்கான செலவையும் பேனர் வைத்தவர்களிடம் பெற வேண்டும். அதிகாரிகள் பேனர்களை அகற்றாவிட்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும். இதை உள்ளாட்சித்துறை அமைச்சருடன் கலந்து பேசி முடிவெடுத்துள்ளோம். உள்ளாட்சித்துறை அமைச்சர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இன்றுமுதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  உடனடியாக நகரம், கிராமப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றப்படும். நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அனுமதியின்றி எந்த பேனரும் வைக்கக்கூடாது. மீறி வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

You may have missed