டில்லி:

தண்டனை பெற்ற குற்றவாளிகள் அரசியல் கட்சி தொடங்கவும், கட்சி பதவியில் இருப்பதற்கும் தடை விதிக்க கோரி பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞச் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 29 (ஏ)ல் குற்றவாளிகள் தொடங்கிய கட்சிகளுக்கு அங்கிகாரத்தை ரத்து செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் தண்டனை பெற்ற குற்றவாளிகள் கட்சியின் நிர்வாக பதவிகளில் இருக்கிறார்களா? என்பதையும் ஆய்வு செய்ய அனுமதி அளிப்பது குறித்தும் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜக செய்தி தொடர்பாளர் அஸ்வினி உபத்யாய தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை அமர்வில் நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசுத் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘‘கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற நபர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண் டும். அதோடு அவர் கட்சியை வழிநடத்தும் பொறுப்பிலும் இருக்க கூடாது’’ என்று வாதிட்டார்.

வாதத்தின் இறுதியில் இந்த பிரச்னையை ஆய்வு செய்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவில் தலையிட நீதிபதிகள் ஒப்புக் கொண்டனர். கிரிமினல்கள் அல்லாத தேர்தல் முறை மற்றும் உட்கட்சி ஜனநாயகத்தை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.