மதுரை:

மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை கைது செய்ய நாளை வரை தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் ஒன்றிய அதிமுக இளைஞரணி துணைச் செயலாளராக இருப்பவர் சபாபதி. இவர், சமீபத்தில் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது புகார் அளித்திருந்தார்.

அதில் அவர், “ கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது, தேர்தல் செலவுக்கு கடனாக ரூ.4 கோடி நத்தம் விசுவநாதனுக்கு அளித்தேன். அதில் ரூ.2 கோடியை திரும்ப கொடுத்தார். மீதமுள்ள ரூ.2 கோடி பணத்தை கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்தார். த்தம் விஸ்வநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குடும்பத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று சபாபதி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நத்தம் விசுவநாதன் மீது, கொலை மிரட்டல், மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நத்தம் விஸ்வநாதன் மனு அளித்திருந்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணை, நீதிபதி நிஷாபானு முன்னிலையில் இன்று நடைபெற்றது. அப்போது, அரசியல் விரோதம் காரணமாக புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முன் ஜாமீன் அளிக்க வேண்டும் என்றும், நத்தம் விஸ்வநாதன் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

வழக்கை நாளை (மார்ச் 15-ம் தேதி) ஒத்தி வைத்து உத்தரவிட்ட நீதிபதி அதுவரை நத்தம் விஸ்வநாதனை கைது செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டார்