இந்தியாவில் வாழை சாகுபடி: தமிழ்நாடு முதலிடம்

மதுரை: இந்தியாவிலேயே வாழை மகசூல் அதிகம் பெறும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. நாட்டின் மொத்த மகசூலை விட தமிழ்நாட்டில் கிடைக்கும் வாழைப்பழத்தின் மகசூல் அதிகம் என மாநில வேளாண்மைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.தேசிய தோட்டக்கலை, தமிழ்நாடு வேளாண்மைத்துறை மற்றும் வாழைப்பயிர் சாகுபடி கூட்டமைப்பு சார்பில் தேசிய வாழைப்பழ விழாவின் நான்காவது துவக்க விழா மதுரையில் நடைபெற்றது.
banana
இதில் பேசிய மாநில வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு, ”நாட்டின் மொத்த வாழை சாகுபடி சராசரியாக 37 மெட்ரிக் டன் என்றளவில் உள்ள நிலையில் தமிழ்நாடு மட்டும் ஹெக்டேருக்கு 100 மெட்ரிக் டன் வாழை சாகுபடியை கொடுக்கிறது. தமிழ்நாட்டில் 18 வகையான வாழைப்பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பிற மாநிலங்களில் நான்கு வகையான வாழைப்பழங்களை மட்டுமே சாகுபடி செய்கின்றன. சொட்டு நீர் பாசனம், திசு வளர்ப்பு, திரவ உரங்கள் மீதான மானியங்கள் உள்ளிட்ட அரசின் பல முயற்சிகளால் விவசாயிகள் இத்தகையை சாதனையை நிகழ்த்தியுள்ளனர்” என்று கூறினார்.

வேளாண் மற்றும் கூட்டுறவு துறையின் இணை செயலாளரான Dr. ஷகில் பி அஹமது இந்த விழாவில் பங்கேற்றார். அப்போது பண்ணையில் வாழை கிலோ ரூ.30க்கும், வாழை பவுடர் ரூ.200 க்கும், வாழை சிப்ஸ் ரூ.250 க்கும் விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைதுறையின் முதன்மை செயலாளரான ககன்தீப் சிங் பேடி, ஆண்டுதோறும் 62 லட்சம் டன் வாழை உற்பத்தி செய்யப்படுவதாகவும், 3 லட்சம் ஹெக்டேர் நிலம் வாழை சாகுபடிக்கு பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார். மேலும் வாழை சாகுபடிக்காக மாநில அரசு நான்கு புதிய திட்டங்களை வகுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வாழை உற்பத்தியில் உலகளவில் 5வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. அடுத்த 5 வருடங்களில் தமிழ்நாடு முதலிடத்திற்கு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விழாவில் செங்கோட்டையன், திண்டுக்கல் ஸ்ரீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.