சென்னை,

விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.

தி.மு.க. தலைமையின் கீழ் நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வணிகர் சங்கங்களும் முழு ஆதரவை அளித்துள்ளன. ஓட்டல்கள் மூடப்படுகின்றன. தியேட்டர்களில் பகல் காட்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன. போக்குவரத்து தொழிலாளர்களும் முழு அடைப்பில் பங்கேற்கிறார்கள்.

முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ள அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்களை சேர்ந்த டிரைவர்கள் பஸ்களை ஓட்ட மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். வியாபாரிகள் கடைகளை அடைத்து முழு அடைப்பில் கலந்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.

இந்த முழு அடைப்பு போராட்டத்தில், தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. முழு அடைப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும்,  நாளை வழக்கம் போல் பஸ்கள் இயங்கும் என்று  தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இதன் காரணமாக அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடாதபடி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

நாளை பஸ்கள் ஓடும் பஸ்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படும் என்றும்,  பஸ் டெப்போக்கள் முன்பும் தேவையான போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அதுபோல், முழு அடைப்பில் பங்கேற்காமல் கடைகளை திறந்து வைத்திருக்கும் வியாபாரிகளை மிரட்டி கடைகளை அடைக்க சொன்னால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதேபோல பஸ் போக்குவரத்தை தடை செய்பவர்கள் மீதும் பஸ்களை சேதப்படுத்த நினைப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது

. முழு அடைப்பு போராட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்களை தடுக்க 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

சென்னையில் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

அதிகாலையிலேயே அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்படு கிறது. பணிமனைகளில் இருந்து பஸ் புறப்படும்போது முழு அடைப்பில் கலந்து கொள்ளும் கட்சிகளை சேர்ந்தவர்கள் பஸ்களை ஓட்டவிடாமல் தடுக்கக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

முழு அடைப்பு காரணமாக பிரச்சினைக்குரிய இடங்களாக கருதப்படும் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.