தமிழகத்தில் இன்று ‘பந்த்’: பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் குவிப்பு

சென்னை:

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் கண்டித்து இன்று தமிழகத்தில் ”பந்த்’ நடத்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. அதன் படி இன்று தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி  ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய மனிதாபிமானமற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயத்துடன் உயிருக்கு போராடி வருகிறார்கள்.

இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

நேற்று வணிகர்கள் கடைஅடைப்பு நடத்தி எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இன்றைய முழு அடைப்பு போராட்டத்துக்கு வணிகர்கள் மத்திய எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லை. இருந்தாலும் காலை 9 மணிக்கு மேல் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை உள்பட தமிழக தலைநகரங்களில் ஏதும் அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்று முன்னேற்பாடாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை கோட்டை பகுதி மற்றும் சேப்பாக்கம், கோயம்பேடு  உள்பட  தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சதுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.