பெங்களூரு

னது தொடர்பு விவரங்களை அளிக்காத ஐ ஏ எஸ் அதிகாரிக்கு பொருட்களை விற்பனை செய்ய பெங்களூரு டெகத்லான் நிறுவனம் மறுத்துள்ளது.

விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி சாதனங்களை விற்பனை செய்யும் புகழ் பெற்ற விற்பனை நிறுவனமான டெகத்லான் விற்பனை நிலையம் பெங்களூருவில் உள்ள சிக்கஜாலா பகுதியில் அமைந்துள்ளது.   இந்த விற்பனை நிலையத்தில் சில பொருட்களை வாங்க கேப்டன் மணிவண்ணன் என்னும் ஐஏஎஸ் அதிகாரி வந்துள்ளார்.    இவர் தற்போது தொழிலாளர் மற்றும் தகவல் துறைச் செயலராக பணி புரிகிறார்.

இவர் பொருட்களை வாங்கும்  போது நிறுவன ஊழியர்கள் இவரிடம் இவருடைய தொடர்பு எண் மற்றும் ஈ மெயில் விவரங்களைக் கேட்டுள்ளார்.  மணிவண்ணன் அந்த விவரங்களை அளிக்க மறுத்துள்ளார்.   அதையொட்டி நிறுவனம் அவருக்குப் பொருட்களை விற்பனை செய்ய மறுத்துள்ளது.   இந்நிகழ்வு குறித்து மணிவண்ணன் அந்நிறுவன வாடிக்கையாளர் தொடர்பு அலுவலகத்துக்கும் பெங்களூரு நகர வாடிக்கையாளர் நல அமைப்புக்கும் புகார் அளித்துள்ளார்.

தனது புகாரில் மணிவண்ணன், “எந்த ஒரு வாடிக்கையாளரும் தனது தொடர்பு விவரங்களை அளிக்காததற்காக விற்பனை செய்ய முடியாது என மறுக்க முடியாது.  நான் இது குறித்து பெங்களூரு நகர வாடிக்கையாளர் நல அமைப்பு மூலம் இந்த நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ள விற்பனை உரிமம் குறித்து ஆராய்ந்தேன்.   அதில் ஒரு வாடிக்கையாளர் தொடர்பு விவரங்களை அளிக்காவிட்டால் விற்பனை செய்ய மறுக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மணிவண்ணனுக்கு டெகத்லான் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், “ஏற்கனவே நடந்துள்ள பல வழக்குகளில் நீதிமன்றம் அனைத்து வாடிக்கையாளர்களிடம் இருந்தும் தொலைப்பேசி எண் மற்றும் ஈ மெயில் ஐடி ஆகியவற்றை வாங்க வேண்டும் எனக் கூறி உள்ளது.   எங்களுடைய நிறுவனம் அதை ஒரு விதியாகக் கொண்டுள்ளது.   இவை யாவும் வாடிக்கையாளர்களின் அடையாளம் ஆகும்.

அடையாளம் இல்லாத ஒரு வாடிக்கையாளருக்குப் பொருட்களை விற்று அதனால் ஏற்படும் பின்விளைவுகளை நிறுவனம் சந்திக்க விரும்பாததால் விவரங்களை அளிக்க விரும்பாத வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை விற்பனை செய்வதில்ல்லை.   எனவே  நாங்கள் இந்திய ஒப்பந்த விதி 1872 இன் படி உங்களுக்கு மேலே குறிப்பிட்ட காரணங்களுக்காகப் பொருட்களை விற்பனை செய்ய மறுத்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.

மணிவண்ணன் இந்த கடிதத்தைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.  அதற்கு காவல்துறை ஆணையர் அளித்துள்ள பின்னூட்டத்தில், ”சைபர் கிரைம் தொடர்பாக நாங்கள் அளிக்கும் முதல் எச்சரிக்கை. எந்த ஒரு வர்த்தக நிறுவனம் மற்றும் மால்களில் மொபைல் நம்பரைப் பகிரக்கூடாது என்பதாகும்.  எனவே நீங்கள் அலைப்பேசி எண் அளிக்க மறுத்து விடுங்கள்.   இவ்வாறு மொபைல் எண்ணை அளிப்பது மூலம் நீங்களே சைபர் கிரைம் குற்றவாளிகளுக்குக் கதவைத் திறந்து விடுகிறீர்கள்” எனப் பதில் அளித்துள்ளார்.