மகளுக்கு பூணூல் கல்யாணம் செய்த பெங்களூரு தொழிலதிபர்

பெங்களூரு

பெங்களூரு தொழிலதிபர் ஒருவர் தனது மகனுடன் மகளுக்கும் பூணூல் கல்யாணம் செய்துள்ளார்.

அந்தண சிறுவர்களுக்கு பூணூல் கல்யாணம் மிக விமரிசையாக நடப்பது வழக்கம். இதைஉபநயனம் என அழைப்பார்கள்.  . இந்த உபநயனம் அந்தண ஆண் சிறுவர்களுக்கு மட்டுமே நடக்கும். சிறுமிகளுக்கு நடப்பது இல்லை. இந்த வழக்கம் பல்லாண்டு காலமாக இருந்து வருகிறது.

பெங்களூருவை சேர்ந்த வியவஸ்தா என்னும் தொழிலதிபர் மற்றும் அவர் மனைவியும் வழக்கறிஞருமான ஷாமா ஆகிய இருவருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். இவர்களில் ஒருவர் ஆண் ஒருவர் பெண் ஆவார்கள். இருவருக்கும் தற்போது எட்டு வட்யது முடிந்துள்ளது. ஆணுக்கு பெண் சமம் என்பதை நிரூபிப்பது போல் ஷாமா – வியவஸ்தா தம்பதியினர் இருவருக்கும் உபநயனம் செய்துள்ளனர்.

இதுகுறித்து ஷாமா, “பெண்களுக்கு உபநயனம் நடத்தலாம் என சாஸ்திரங்களில் உள்ளது. நான் இதை படித்துள்ளேன். நாங்கள் இந்த விழாவை நடத்தும் முன்பு பல அறிஞர்களை கலந்தாலோசித்தோம். அவர்கள் புராண காலத்தில் இந்த வழக்கம் இருந்ததை உறுதிப்படுத்தினார்கள். அதன் பிறகு எங்கள் மகனுடன் மகளுக்கும் உபநயனம் செய்ய முடிவு செய்தோம்” என தெரிவித்துள்ளார்.

ஷாமாவின் தந்தையும் மூத்த வழக்கறிஞருமான நாரகுண்ட், “வெகு நாட்களுக்கு முன்பு இரு பாலாருக்கும் இந்த விழா நடத்தப்பட்டு வந்தது. இது நமது வேதங்களிலும் உபனிஷத்துகளிலும் காணப்படுகிறது. காலப்போக்கில் இந்த வழக்கம் மறைந்து விட்டது. அத்துடன் இறுதிச் சடங்கு உள்ளிட்ட பல சடங்குகளை செய்ய பெண்களை அனுமதிப்பதும் இல்லை. கடவுளின் முன் ஆண் பெண் இருவரும் சமம் என்பதை பலரும் மறந்து விட்டனர்” என கருத்து தெரிவித்துள்ளார்.

You may have missed