பெங்களூரு சர்வதேச விமானநிலையத்தில் 100% சோலார் மின்சார பயன்பாடு….2020க்குள் இலக்கு

பெங்களூரு:

பெங்களூரு கெம்பேகவுடா விமானநிலையம் முழுவதும் 2020ம் ஆண்டுக்குள் சோலார் மின்சாரத்தில் இயங்கவுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை பெங்களூரு சர்வதேச விமானநிலைய நிறுவனம் மேற்கொண்டுள்ளது. தற்போது இந்த விமானநிலையத்துக்கு தினமும் 11 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. 2வது முணையம் செயல்பட தொடங்கியவுடன் மின்சாரத்தின் தேவை 20 மெகா வாட்டாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.

 

தற்போது இங்கு 3.44 மெகாவாட் மின்சாரம் சோலார் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்து 2 கட்டங்களாக இதன் திறனை 8.35 மெகா வாட்டாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வகையில் மொத்தம் 12 மெகாவாட் மின்சாரத்தை விமானநிலைய வளாகத்திலேயே உற்பத்தி செய்யும் வகையில் பணிகள் நடந்து வருகிறது. அடுத்து விமானநிலையத்துக்கு வெளியே 8 மெகாவாட் உற்பத்தி செய்யவும் திட்டம் உள்ளது.

இது குறித்து பெங்களூரு சர்வதேச விமானநிலைய துணைத் தலைவர் லட்சுமி நாராயணன் கூறுகையில், ‘‘தற்போது சோலார் தகடுகள் மேற் கூரையிலும், தரையிலும் அமைக்கப்ப்டடு வருகிறது. விமான நிலையம் முழுவதும் 2020ம் ஆண்டுக்குள் நூறு சதவீத புதுப்பிக்கத்தக்க மின்சார பயன்பாட்டை கொண்டு வர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வளாத்தின் உள்ளேயும், வெளியேயும் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யும் அளவையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.