பெங்களூரு

பெங்களூரு நகரின் புகழ் பெற்ற மது அருந்தும் விடுதியான மங்கி பார் மூடப்பட்டதால் பணி இழந்தோர் மற்ற பார் ஊழியர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தி உள்ளனர்.

பெங்களூரு நகரில் மது அருந்தும் விடுதிகளான பார்கள் மற்றும் பப் கள் பெருமளவில் உள்ளன.  இங்கு மது அருந்தும் மக்களின் மகிழ்ச்சிக்காக இசை நிகழ்வுகள் நடப்பது வழக்கமாகும்.   தற்போது பெங்களூரு காவல்துறையினர் இந்த பார்கள் நடத்தப் பொழுதுபோக்கு உரிமம் (ENTERTAINMENT LICENCE) பெற வேண்டியது அவசியம் என சட்டமியற்றி உள்ளனர்.  இந்த பார்களில் மக்கி பார், பிஃபிளாட், ஹம்மிங் டிரீ போன்றவை புகழ் பெற்றவை ஆகும்.

இந்த பார்களுக்கு பொழுதுபோக்கு உரிமம் பெற தொழில் சான்றிதழ் அவசியமாகும். ஆனால் தொழில் சான்றிதழ்கள் இத்தகைய விடுதிகளுக்கு அளிக்கப்படுவது கிடையாது.  ஆகையால் இந்த பார்களுக்கு பொழுதுபோக்கு உரிமம் பெற முடியாத நிலை உள்ளது.   மேலும் உச்சநீதிமன்றம் பொழுதுபோக்கு உரிமம் பெறும் சட்டத்தைக் கடுமையாக்கியதால் காவல்துறையினர் பல்வேறு சான்றிதழ்களைக் கேட்பதால் பார்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கட்டிட அமைப்பு சான்றிதழில் உள்ளதைப் போல் பார்கள் அமைக்கப்படுவது கிடையாது.  வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப அமைப்புக்கள் மாற்றப்படும் போது அதற்கான அனுமதியை தற்போதைய புதிய சட்டவிதிகளின்படி பெற முடியாத நிலை உள்ளது.  இதையொட்டி பல புகழ்பெற்ற பார்கள் மூடும் நிலையில் உள்ளன.  கடந்த திங்கள் அன்று மங்கி பார் மூடப்பட்டுள்ளது.  இதனால் பலர் பணி இழந்துள்ளனர்.

இவ்வாறு பணி இழந்துள்ளவர்கள்,, வேறு பல பார்களில் பணி புரிபவர்கள், இசைக் கலைஞர்கள் ஆகியோர் இந்திரா நகரில் உள்ள மங்கி பார் வாசலில் கூடி தங்களுக்குப் பணி வழங்கக்கோரி போராட்டம் நடத்தினார்கள்.  மூடப்பட்ட மங்கி பார் வாசலில் பூக்களை வைத்தும் மெழுகுவர்த்திகள் ஏற்றியும் அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

அவர்கள் தங்கள் கைகளில் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி பதாகைகள் ஏந்தி வந்தனர்.  சுமார் 30 நிமிட போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் பயணிகளுக்கும் அங்கு வசிக்கும் மக்களுக்கும் தொல்லை நேருவதால் அவர்களாகவே கலைந்து சென்றுள்ளனர்.