பெங்களூரு

பெங்களூருவில் நடந்த கொல்கத்தா மாடல் பூஜா சிங் டே கொலை  வழக்கில் ஓலா டாக்சி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதி காலை பெங்களூரு கடயராப்பன்னஹள்ளி பகுதியில் விமான நிலைய சுற்றுச் சுவர் ஓரமாக ஒரு பெண்ணின் சடலம் காயங்களுடன் கிடந்துள்ளது. அதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். காவல்துறையினர் வந்து அந்த சடலத்தைச் சோதனை இட்டனர். ஜீன்ஸ் அணிந்திருந்த அந்தப் பெண்ணின் சடலத்தின் கையில் கட்டியிருந்த டைடன் கைக்கடிகாரம் இருந்தது. வேறு அடையாள அட்டை, பர்ஸ், கைப்பை உள்ளிட்ட எந்தப் பொருளும் கிடைக்கவில்லை.

எனவே அந்தப் பெண்ணை அடையாளம் காணும் முயற்சியில்  காவல்துறையினர் ஈடுபட்டனர். விமான நிலையம் அருகே அவர் இறந்து கிடந்ததால் மும்பை, டில்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் அவர் கொல்கத்தாவைச் சேர்ந்த பூஜா சிங் டே என்பது தெரிய வந்துள்ளது. அவர் மாடல் செய்வதோடு பல நிகழ்வுகளை நடத்தும் பணியையும் செய்து வந்துள்ளார். அவர் ஒரு நிகழ்வை நடத்தப் பெங்களூரு வந்தது தெரிய வந்தது. அவர் தங்கி இருந்த ஓட்டலில் நடந்த விசாரணையில் அவர் கடந்த 31 ஆம் தேதி காலை 4.15 மணிக்கு அங்கிருந்து விமான நிலையத்துக்கு ஒரு வாடகைக் காரில் சென்றது தெரிய வந்தது.

அந்த வாடகைக்காரின் ஓட்டுநர் எச் எம் நாகேஷ் என்பவரை விசாரித்த போது  ஷோபாவை கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார். அவர் தனது வாக்குமூலத்தில். “கடந்த ஜூலை 30 ஆம்தெதி அவரை பரப்பன அக்ரகாரா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றேன். அப்போது அவர் அடுத்த நாள் காலை 4 மணிக்கு விமான நிலையம் செல்ல உள்ளதாகவும் தம்மை அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டர். நானும் அவரை 4.15 மணிக்கு அங்கிருந்து அழைத்துச் சென்றேன்.

எனக்கு இரண்டு மாத வாகனக் கடன் தவணை செலுத்த மட்டும் வேறு சில  கடன் செலுத்தப் பணம் தேவையாக இருந்தது. அதனால் எனது வாகனத்தை வேறு பாதையில் ஓட்டிச் சென்று ஷோபாவிடம் பணத்தைத் தருமாறு மிரட்டினேன். அவர் தர ம்ர்த்டு கூச்சலிட்டார். அதனால் நான் அவரை ஜாக்கி கம்பியால் தாக்கினேன். அதன்பிறகு அவர் லக்கேஜ் மற்றும் பரசைச் சோதித்த போது அவரிடம் ரொக்கமாக ரூ.500 மட்டுமே இருந்தது. அதனால் அவரை ஒரு ஓரமாக வீசி எறிந்தேன். ஆனால் அவர் சுயநினைவு பெற்று அங்கிருந்து தப்ப முயன்றார். அதன் பிறகு என்னிடம் இருந்த கத்தியால் குத்தி அவரைக் கொன்றேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

நாகேஷின் வீட்டில் ஷோபாவின் பொருட்கள் கிடைத்துள்ளன. தற்போது அவர் கைது செய்யப்பட்டு காவல்துறை விசாரணையில் உள்ளார். இது  குறித்து காவல்துறை அதிகாரி பீமசங்கர், “தனிப்பட்ட முறையில் அந்தப் பெண் இந்த வாடகை வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளார். அதனால் தன்னை கண்டுபிடிக்க முடியாது என எண்ணி நாகேஷ் இவ்வாறு நடந்துக் கொண்டுள்ளார். இனிமேல் எந்த ஒரு பயணியும் தனிப்பட்ட முறையில் வாடகைக்கார் ஏற்பாடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்”எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.