மத்திய அரசின் ஏவல் துறையாகும் வருமானவரித்துறை!

சிறப்புக்கட்டுரை: இரா. மேகநாதன்

குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்  கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் உள்ள, ரிசார்ட் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இது கர்நாடக மாநில  எரிசக்தித்துறை அமைச்சருமான ஷிவகுமாருக்குச் சொந்தமானது.

இந்த ரிசார்ட் மற்றும் ஷிவகுமாரின  வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை  இன்று அதிரடி சோதனை நடத்தியுள்ளது.

ஷிவகுமாரின்   அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் உட்பட கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்  39 இடங்களில் இந்த ரெய்டு நடந்திருக்கிறது.

இதற்கு என்ன காரணம்?

குஜராத்தில் மொத்தம் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 8-ம் தேதி நடக்க  இருக்கிறது.

காங்கிரஸ் சார்பில், அக்கட்சித் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது படேல் போட்டியிடுகிறார்.

பா.ஜ.க. சார்பில மூவர் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பல்வந்த் சிங் ராஜ்புத், பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர்.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சிலரை பாஜக வளைத்துவிட்டது.  இதையடுத்து  இதர காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கர்நாடகாவுக்கு அழைத்து வரப்பட்டு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குதிரை பேரத்தில் ஈடுபடும், பா.ஜ.க. . தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சி தெரிவிக்கிறது.

பா.ஜ.கவோ   கடந்த வெள்ளியன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய எம்.எல்.ஏ-க்களையும் சேர்த்து, மொத்தம் ஆறு எம்.எல்.ஏ-க்கள் அக்கட்சியில் இருந்து வெளியேறியதால், அவர்களை பெங்களூருவில் அடைத்து வைத்திருப்பதாக. குற்றம்சாட்டுகிறது.

ஆனால் பா.ஜ.க.தான் ஆள்பிடிக்கும் வேலையைச் செய்கிறது என்பது சமீபத்தில் நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்லின் போதே அம்பலமாகிவிட்டது.  காங்கிரஸ் கட்சியின் 11 எம்.எல்.ஏ-க்கள், அணி மாறி வாக்களிக்க வைத்தது பாஜக.

இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றே தீர வேண்டும் என்று காங்கரஸ் எம்.எல்.ஏக்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது பா.ஜ.கட்சி.  அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டது.

மீதமிருக்கும் 44 எம்.எல்.ஏ-க்கள் பெங்களூரு ரிசார்ட்டில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில்தான், எம்.எல்.ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ரிசார்ட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியிருக்கிறார்கள்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அணிமாறி பா.ஜ.கவுக்கு  வாக்களிக்க  தலா 12 கோடி ரூபாய்வரை பேரம் பேசப்பட்டதாக புகார் எழுந்திருக்கிறது.

ஆனால் வருமானவரித்துறையோ “பெங்களூருவில் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களுக்கு பணம் அளிக்கப்படுகிறது” என்கிற யூகத்தைக் கிளப்புகிறது. அதன்படி ரெய்டும் நடத்துகிறது.

பொதுவாக சி.பி.ஐ.யை மத்திய அரசின் ஏவல் துறை என்பார்கள். அதுபோ ஆகிவிட்டது வருமானவரித்துறையும்.

இன்னொரு முக்கியமான விசயத்தை கவனிக்க வேண்டும்.

இங்கே தமிழ்நாட்டில் சசிகலா தரப்பினர் தங்களது ஆதரவு எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் ரிசார்டில் தங்கவைத்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் பெரும் பணமும், கிலோ கணக்கில் தங்கமும் அளிக்கப்பட்டதாக அனைத்துத்தரப்பினராலும் பேசப்பட்டது.

அங்கிருந்துதப்பி வந்த எம்.எல்.ஏ. ஒருவரே இது குறித்து பிறகு வெளிப்படையாக பேசினார். அதன் பிறகு தனியார் தொலைக்காட்சி ஒன்று ரகசியமாக வீடியோ எடுத்து இது குறித்த எம்.எல்.ஏக்களின் வாக்குமூலங்களை அம்பலப்படுத்தியது.

அந்த நேரத்திலேயே கூவத்தூர் விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கவர்னர், குடியரசுத்தலைவர் எல்லோருக்கும் தி.மு.க. மனு அளித்தது. மற்றபல கட்சிகளும் இதே கோரிக்கையை விடுத்தன.

ஆனால் கூவத்தூர் பக்கம் வருமானவரித்துறை அலுவலக பியூன்கூட செல்லவில்லை. அதன் பின்னரும் இது குறித்து வருமானவரித்துறை எந்தவித விசாரணையும் நடத்தவில்லை.

இதில் இன்னும் கொடுமை என்னவென்றால், சசிகலா ஆதரவு அமைச்சர்கள், கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களைத் தங்கவைத்து பணம் கொடுக்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர்களே கூப்பாடு போட்டனர். இவர்களின் கூக்குரல் மத்திய பாஜக அரசை எட்டவே இல்லை.

வருமானவரித்துறையின் சமீபத்திய நடவடிக்கைகளில் இன்னொன்று, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மற்றும் அவரின் மகன், மகளுக்கு எதிரான  நடவடிக்கை. இந்த நடவடிக்கைக்குப் பிறகு அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக கூட்டணியிலான அரசு அமைந்திருப்பதையும் கவனிக்க வேண்டும்.

உண்மையில் வருமானவரித்துறையின் நடவடிக்கைகள் என்ன…

வரி ஏய்ப்புகளைக் கண்டறிந்து தடுத்தல், கள்ளநோட்டு புழக்கத்தை நிறுத்துதல்,  போலியான கணக்குகளைச் சமர்ப்பிப்போரை கண்டறிந்து அபராதம் மற்றும் தண்டனை பெற்றுத் தருதல் போன்றவைதான்.

ஆனால் ஆளும் பாஜக அரசு கை நீட்டும் இடங்களில் எல்லாம் பாய்ந்து ஏவல் துறையாக ஆகிவிட்டது வருமானவரித்துறை.

பா.ஜக. அரசின் வேதனை பட்டியலில் இதுவும் ஒன்று.