பெங்களூரு அணியின் ‘மரண சேஸிங்’ – 178 ரன்கள் இலக்கை ஊதித்தள்ளியது!

மும்பை: ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 178 ரன்கள் என்ற சற்று கடினமான இலக்கை, பொருட்டாகவே மதிக்காமல் அசால்ட்டாக ஊதித் தள்ளியது கோலியின் பெங்களூரு அணி.

இந்த இலக்கை, ஒரு விக்கெட் கூட இழக்காமல், 16.3 ஓவர்களிலேயே எட்டி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது பெங்களூரு அணி. அந்த அணியின் துவக்க வீரர்கள‍ே ஆட்டத்தை எளிதாக முடித்து, மற்ற பேட்ஸ்மென்களுக்கு நல்ல ஓய்வை அளித்துவிட்டனர்.

இந்த சிறப்பான வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு சென்றுவிட்டது அந்த அணி.

அணியின் கேப்டன் விராத் கோலியும், தேவ்தத் படிக்கல்லும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். கேப்டன் கோலி, 47 பந்துகளை எதிர்கொண்டு, 3 சிக்ஸர்கள் & 6 பவுண்டரிகளுடன் 72 ரன்களைச் சேர்த்தார்.

தேவ்தத் படிக்கல்லோ, 52 பந்துகளை மட்டுமே சந்தித்து, 6 சிக்ஸர்கள் & 11 பவுண்டரிகளுடன் 101 ரன்களை விளாசி, ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்தார்.

இவர்கள், இருவரின் ஆட்டத்தின் மூலமாக, பெங்களூரு அணி, 21 பந்துகள் மீதமிருக்கையிலேயே, எந்த விக்கெட்டையும் இழக்காமலேயே 10 விக்கெட்டுகளில் அபார வெற்றியைப் பெற்றது.

ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு, இன்றையப் போட்டி மோசமான ஒன்றாக அமைந்துபோனது.