பனாஜி: ஐஎஸ்எல் 7வது சீசன் கால்பந்து தொடரில், பெங்களூரு – கோவா அணிகள் மோதிய போட்டி 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

கோவா மாநிலத்தில் நடைபெற்றுவரும் ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனின் மூன்றாவது லீக் போட்டியில், கோவா – பெங்களூரு அணிகள் மோதின. மொத்தம் 11 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், ஒவ்வொரு அணியும் தலா 2 முறைகள் மோதிக்கொள்ளும்.

ஆட்டத்தின் 28வது நிமிடத்தில், பெங்களூரு அணியின் கிளீட்டன் சில்வா ஒரு கோல் அடித்தார். இதனால், முதல் பாதி ஆட்டத்தில், பெங்களூரு அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்நிலையில், இரண்டாவது பாதி ஆட்டம் துவங்கியது. அதில், 57வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ஜுவானர் ஒரு கோலடிக்க 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது பெங்களூரு அணி.

ஆனால், அதன்பிறகு சோர்ந்துவிடாத கோவா அணிக்கு, இகோர் அங்குலோ, 66வது மற்றும் 69வது நிமிடத்தில் 2 கோல்கள் அடித்து அசத்தினார். அதன்பிறகு எந்த அணியாலும் கோலடிக்க முடியாத நிலையில், ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது.