பெங்களூரு: குழந்தைகளுக்கான இந்திரா காந்தி மருத்துவமனையில், ஒரு மருத்துவர் மற்றும் 2 துணை மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தங்களுக்குப் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளதோடு, அதன் பற்றாக்குறை குறித்தும் கவலை எழுப்பியுள்ளனர் அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்கள்.
தெற்கு பெங்களூரின் ஜெயா நகரில் அமைந்துள்ளது இந்திரா காந்தி குழந்தைகள் நல மருத்துவமனை. இங்கு, சமீபத்தில், ஒரு மருத்துவர் மற்றும் இரண்டு துணைநிலை மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எனவே, இதர ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர். அதேசமயம், அந்த மருத்துவமனையில் பிபிஇ கிட்டுகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதுதொடர்பாக அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இதுதொடர்பாக சரியான பதில் அளிக்கப்படவில்லை.
தொற்று உறுதிசெய்யப்பட்ட பிறகு, அனைவருக்கும் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் உறுதியளித்தாலும், இதுவரை, கொரோனா வார்டில் பணியாற்றும் ஒரேயொரு ஊழியருக்கு மட்டுமே பிபிஇ கிட் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.